சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்” அமைப்பினருக்கும் தொடர்பு மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பு தகவல்.!



சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் “பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்” அமைப்பினருக்கும் தொடர்பு என மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ் பிரான்சிஸ் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டதில், சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறந்துவிட்டார். மீதமுள்ள 9 போலீசாரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் போலீஸ்காரர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ்பிரான்சிஸ் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தநிலையில் அவர்கள் 3 பேரும் மீண்டும் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், “ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோர் இறப்புக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினருக்கு தொடர்பு உள்ளது. சம்பவத்தன்று பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த 5 பேர் போலீஸ் நிலையத்தில் இருந்துள்ளனர், என போலீஸ்காரர் முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் அவர்களை இதுவரை சி.பி.ஐ. போலீசார் விசாரிக்கவில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது. மனுதாரர்களை ஜாமீனில் வெளியே வர அனுமதிக்க வேண்டும்” என்று வாதாடினர்.

பின்னர் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர்கள் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என ஆட்சேபம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நீதிபதி, “சமீபத்தில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். இனி கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால், அவர்கள் சாட்சியங்களை கலைக்க நேரிடும்” என்றார்.

மேலும், “இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாக 2 பெண் போலீஸ்காரர்களின் வாக்குமூலம் கருதப்படுகிறது. அந்த வாக்குமூலத்துடன் கூடிய குற்றப்பத்திரிகை தகவல்கள் இந்த ஜாமீன் மனுக்களின் விசாரணைக்கு அவசியமாகிறது. எனவே அதை சி.பி.ஐ., இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல குற்றம்சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் உள்ள 9 போலீசாருக்கும் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்க வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் இந்த ஜாமீன் மனுக்களின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments