புதுக்கோட்டையில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்தவரை கைது செய்தனர். மேலும் மற்றொருவரை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் இருந்து நாமக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், டவுன் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன் (வெள்ளனூர்), சந்திரகாந்த் (கீரனூர்) மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் புதுக்கோட்டை-திருச்சி ரோட்டில் திருக்கோகர்ணம் அருகே தாவூத்மில் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி வந்த காரை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில் பண்டல், பண்டல்களாக கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை காரில் கடத்தி வந்த அரிமளம் அருகே சீராடும்செல்வி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்கிற தாஸ் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் சோதனையின்போது காரில் வந்த அவரது கூட்டாளியான கானாடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் தப்பியோடிவிட்டார். இதனையடுத்து 88 பண்டல்களில் இருந்த 180 கிலோ கஞ்சாவுடன், காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரமேசை தேடி வருகின்றனர்.
கைதான ஆரோக்கியதாசிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததும், அரிமளம் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் மீது கோவை ஆர்.எஸ்.புரம், புதுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு, காரைக்குடி வடக்கு, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களிலும், கேரள, ஆந்திர மாநிலங்களிலும் மது, கஞ்சா விற்பனை, திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரிந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.27 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். புதுக்கோட்டையில் கடத்தல் கஞ்சா பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பண்டல், பண்டலாக கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து தனிப்படையினர் கூறுகையில், “நாமக்கல்லில் கஞ்சா வியாபாரி ஒருவர் சிக்கி உள்ளார். அவர் கொடுத்த தகவலின்பேரில் தான் புதுக்கோட்டையில் ஒரு வீட்டில் கஞ்சா பண்டல், பண்டலாக பதுக்கி வைத்து விற்கப்படுவது தெரிந்துள்ளது. அதனை ஒருவருக்கு விற்பனைக்காக காரில் கடத்தி செல்லப்படும் போது ஆரோக்கியதாஸ் சிக்கினார்“ என்றனர்.
கைதான ஆரோக்கியதாசி டம் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் விசாரணை நடத்தினார். அதன்பின்பு கைதானவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.