புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து... மாவட்ட ஆட்சியர் திடீர் அறிவிப்பு..!கொரோனோ தொற்று அச்சம் காரணமாக இன்று காந்தி ஜெயந்தியன்று தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், அக்டோபர் 2-ந் தேதி (இன்று) காந்தி ஜெயந்தியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று கிராமசபை கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதற்கான உத்தரவை அரசின் ஊரக வளர்ச்சி இயக்குனரகம், அனைத்து ஊரக உதவி இயக்குனர்களுக்கும் அனுப்பி உள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் சூழ்நிலை காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இது குறித்த அனைத்து பஞ்சாயத்துக்களும் தகவல் தெரிவித்து கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறுத்தும்படியும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ அரசின் உத்தரவு பிறப்பித்துள்ள விவரத்தை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 499 கிராம ஊராட்சிகளில் 2-ந் தேதி நடைபெறுவதாக இருந்த கிராம சபை கூட்டம், கொரோனா நோய்த் தொற்று பரவுவதை தடுக்கவும், பொது மக்களின் நலன் கருதியும் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகள் உத்தரவின்படி சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். அது தவிர, சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தியன்றும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும். ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமசபை கூட்டத்தை நடத்துவார்கள்.

இந்த கூட்டங்களில் ஊராட்சி நிர்வாகம், செலவுகள், பொது மக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும். பொதுமக்கள் எழுப்பும் கோரிக்கைகள் கிராம சபை கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நிறைவேற்றப்படும். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அண்மையில் நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனிடையே, காந்தி ஜெயந்தி நாளன்று உரிய தடுப்பு நடவடிக்கைகளுடன் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கூட்டங்களின் போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்ற திமுக மற்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

மத்திய பாஜ அரசு கொண்டு வந்து, அதிமுக ஆதரித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், கட்சி பேரம் பாராமல் தங்களது கிராமசபைக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், கொரோனா காரணமாக காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறும் ஊராட்சி கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக, கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படாது என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments