புதுக்கோட்டையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.!



புதுக்கோட்டை மாவட்டம், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் அஸரப் அன்சாரி தலைமையில் தெற்கு 4ம் வீதி கே.எம் மஹாலில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கௌவரத்தலைவர் சேகர், சக்திவேல், டைமண்ட் பஷீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் செயலாளர் முத்துகருப்பன் வரவேற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற குளத்தூர் முத்துசுவாமி மெட்ரிக் பள்ளி சக்திவேலை சங்கம் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டி தலைவர் அஸரப் அன்சாரி பேசினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கொரோனா தொற்றுநோய் பரவலை எதிர்த்து களப்பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இச்சங்கம் சார்பில் ஒத்துழைப்பு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆன்லைன் வகுப்பு வழியாக கல்வி கற்க மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் வற்புறுத்தக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது. கடந்த கால கட்டண நிலுவை தொகை மற்றும் இந்த கல்வியாண்டின் 40 சதவீதம் கல்வி கட்டணம் பெறுவது தொடர்பான உயர்நீதி மன்ற தீர்ப்பை ஊடகங்கள் பெற்றோர்களுக்கு கொண்டு சேர்த்திட அனைத்து வகை ஊடகங்களையும் இத்தீர்மானம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை பிற பள்ளிகளில் சேர்க்கக் கூடாது மற்றும் இ.எம்.ஐ.எஸ் எண்ணை தனியார் பள்ளி நிர்வாக ஒப்புதல் இன்றி அரசு பள்ளிகளில் எடுப்பதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவை அவர்களுக்கு வழங்க வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டம் 12(1) சி-ன் படி இலவச மாணவர் சேர்க்கையை இந்தகல்வியாண்டில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 

2019-20 கல்வி ஆண்டின் ஆர்.டி.இ கல்வி கட்டணம் நிலுவையை இந்த பேரிடர் நேரத்தில் பள்ளிகள் திறக்காத சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனே முழு தொகையையும் தவணையின்றி வழங்க வேண்டும். வருடந்தோறும் பெறப்படும் சுகாதாரத் துறை மற்றும் தீயணைப்பு சான்றிதழ் பெறுவதிலிருந்து இந்த கல்வியாண்டில் விலக்கு அளிக்கப்பட வேண்டும். டி.டி.சி.பி சான்று பெறுவதிலிருந்து நர்சரி பள்ளிகளுக்கு முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

மேலும் நர்சரி பள்ளிகளை 6,7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு தரம் உயர்த்த உரிய நடவடிக்கைக மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி திறக்கப்படாத நிலையில் பள்ளி வாகனங்கள் இயக்கப்படாத நிலையில் காப்பீடு மற்றும் சாலை வரி செலுத்துவது போன்றவற்றிற்கு பள்ளிகளுக்கு சாதகமான நிலையை தமிழக அரசு எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து வகை பயன்பாடுகளை பெற தேவைப்படும் ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்று பெற அதிக கால தாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் முழுமையான பயனை அடைய முடியவில்லை. 

ஆகவே மாவட்ட நிர்வாகம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆய்வு செய்து உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும். கல்வித்துறை சார்பாக கூட்டப்படும் கூட்டங்களின் தகவல்கள் ஒருநாள் முன்னதாக பள்ளிகளுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும். மேலும் பள்ளி நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு அலுவலர்களை நியமிக்கும்பொழுது அப்பணிகள் குறித்து முழுமையான கருத்துகளை அறிந்த நபர்களையே நியமிக்கப்பட வேண்டும். பள்ளிகளிலிருந்து பெறப்படும் முக்கிய தகவகல்கள் குறித்த படிவங்களை அளித்த பின்னரும் மீண்டும் மீண்டும் கேட்கும் சங்கடமான சூழ்நிலையை இனிவரும் காலங்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பள்ளி திறப்பது குறித்து தற்போது உள்ள சூழ்நிலையை ஒருங்கிணைப்பாளர் ரமணன் எடுத்துக் கூறினார். எளிய முறையில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது பற்றி லண்டன் லுக் பள்ளி நிர்வாகி டாக்டர். கிருஷ்ணமூர்த்தி எடுத்துரைத்தார். நிறைவாக பொருளாளர் மேசியா சந்தோஷம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் ராஜ், கந்தசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பல்வேறு ஒன்றியங்களிலிருந்து பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments