புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசை கண்டித்து தடையை மீறி கிராம சபை கூட்டம்.! எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு.!!இன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் திமுகவினர் தடையை மீறி மக்கள் சபை கூட்டங்களை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் திமுக எம்எல்ஏ மெய்யநாதன் தலைமையில் நூதன முறையில் நாடகம் நடத்தி மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மக்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கண்டனங்களை தெரிவித்தனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று மாலை அறிவித்தது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் திமுக சார்பில் தடையை மீறி கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் எனவும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளிலும் திமுக சார்பில் தடையை மீறி மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட கொத்தமங்கலம், பள்ளத்திவிடுதி, கரும்பிராயன் கோட்டை, உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுகவினர் தடையை மீறி மக்கள் சபை கூட்டங்களை நடத்தினர்.
 
ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் திமுக எம்எல்ஏ மெய்யநாதன் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சிறு வணிகர்களிடம் விற்பனை செய்வதற்காக கொண்டு வருவது போலவும், அதனை மத்திய அரசு வழிமறித்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வைப்பது போலவும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதும் தலையில் துண்டைப் போட்டு கொண்டு விவசாயிகளாக வேதனையோடு செல்வது போலவும் நாடகம் நடத்தி நூதன முறையில் மக்கள் தங்கள் எதிர்ப்பை மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வெளிப்படுத்தினர்.

மேலும் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்தும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் எம்எல்ஏ மெய்யநாதன் தலைமையில் மக்கள் முழக்கங்களையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்,இதற்கு தமிழக அரசு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைபோல் திருமயம் ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொகுதி எம்எல்ஏ வும் முன்னாள் அமைச்சருமான ரகுபதி கலந்துகொண்டு அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments