கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா கந்தூரி விழாவில் சந்தன கூடு ஊர்வலம்.!



கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா கந்தூரி விழாவில் சந்தனகூடு ஊர்வலம் நடைபெற்றது.

கோட்டைப்பட்டினம் மீன்பிடித்தளம் அருகே அமைந்துள்ளது ராவுத்தர் அப்பா தர்கா. பிரசித்தி பெற்ற இந்த தர்காவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகம், உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தினந்தோறும் எண்ணற்ற மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக கொண்டாப்படும். அதே போல் இந்த வருடமும் கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி தினந்தோறும் இரவு தர்காவில் பாத்திஹா (குர்ஆன்) ஓதப்பட்டு நார்ஷா வழங்கப்பட்டது.இந்நிலையில் 10-வது நாளான நேற்று கந்தூரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் தர்கா அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு கூட்டுக்கொட்டகையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு புறப்பட்டு முக்கியவீதி வழியாக ஊர்வலமாக சென்று தர்காவை வந்தடைந்தது. பின்பு ராவுத்தர் அப்பா அடக்கஸ்தளத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது.

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கந்தூரி விழா அதிக கூட்டம் இல்லாமல் எளிமையாக நடந்து முடிந்தது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம், திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த கந்தூரி விழா மதநல்லிணக்க விழாவாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவின் முதல்நாள் மண்டகப்படியை பத்தர் குடும்பத்தினர் காலங்காலமாக செய்து வருகின்றனர். தர்காவை பராமரித்தல், சந்தனக்கூட்டிற்கு முன்பு தீ பந்தம் ஏந்தி செல்லுதல், சந்தனக்கூட்டை வடம்பிடித்து இழுத்தல் ஆகியவைகளை கோட்டைப்பட்டினத்தை சுற்றியுள்ள நட்புகிராமமான கொடிக்குளம், இரளிவயல் பகுதியை சேர்ந்த பிறமதத்தவர்கள் காலங்காலமாக செய்து வருகின்றனர். 

ராவுத்தர் அப்பாவும், முனியய்யாவும் தோழராக இருந்துள்ளனர். இதனால் ராவுத்தர் அப்பா அடக்கஸ்தளம் அருகேயே முனியய்யா கோவிலும் அமைந்துள்ளது. தர்கா எவ்வாறு வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோ, அதே போல் முனியய்யா கோவிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments