புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசாரை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்படுமா.?



புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசாரை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்படுமா? என எதிர்பார்க்கின்றனர்.

தமிழக காவல்துறையில் புதிய தொழில்நுட்ப வசதி அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்கள், செயலி உள்ளிட்டவை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பேஸ்புக் என்னும் முகநூலில் அனைத்து மாநகர, மாவட்ட போலீஸ் துறை சார்பில் கணக்கு தொடங்கி அதில் அன்றாட நிகழ்வுகள், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், போலீசார் மேற்கொண்ட பணிகள், உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் முகநூல் பயன்படுத்துவோர் போலீஸ் துறையின் பக்கத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் புகார்களையும் பதிவிடுகின்றனர். இந்த பதிவுகளுக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழக காவல் துறையில் புதிய முயற்சியாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரை தொடர்பு கொள்ள வசதியாக அவர்களது பெயர் விவரம், செல்போன் எண் உள்ளிட்டவற்றை முகநூலில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்தவகையில் திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்ட போலீசில் தினமும் இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐயும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை டவுன், அறந்தாங்கி, கீரனூர், பொன்னமராவதி, ஆலங்குடி, கோட்டைப்பட்டினம், இலுப்பூர் ஆகிய சப்-டிவிஷன்களில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையம், மகளிர் போலீஸ் நிலையம் என மொத்தம் 43 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் இரவில் 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை ஒரு பகுதியாகவும், நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஒரு பகுதியாக இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை செல்போன் எண்ணோடு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால், அதனை இரவில் போலீசாரை பொதுமக்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள், குற்ற சம்பவங்கள், விபத்து தொடர்பாகவும் தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ள எளிதாக இருக்கும்.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் கேட்டபோது, “கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ‘ஆல் ஆபீசர்ஸ் டூட்டி‘ என்ற பெயரில் அதிகாரிகள் உள்பட போலீசார் பணியில் இருந்து வருகின்றனர். இதற்கு முன்பு சுழற்சி முறையில் இரவு ரோந்து பணி ஒதுக்கப்பட்டு வந்தது. ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டிற்கு 3 சப்-டிவிஷன்கள் ஒதுக்கப்படும்“ என்றனர். இதேபோல முகநூலில் இரவு ரோந்து போலீசாரின் தொடர்பு எண் வெளியிட அதிகாரிகள் உத்தரவிட்ட பின்பு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments