'நிவர்' புயல் எதிரொலி... மருத்துவக் கலந்தாய்வு வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.!‘நிவர்’ புயல் எதிரொலியாக இன்று நடக்க இருந்த மருத்துவ கலந்தாய்வு வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதலில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த கலந்தாய்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரும், மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளருமான டாக்டர் ஜி.செல்வராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நிவர் புயல் காரணமாக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கவுன்சிலிங்கில் பங்கேற்பதில் போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகளை சந்திக்காதவாறு 24-ந் தேதி (இன்று) நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் வகையில் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் மேலும் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே வந்தவர்களுக்கு...

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி 24-ந் தேதி (இன்று) நடைபெற உள்ள கலந்தாய்வுக்கு ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments