புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது எப்படி.? புதுகை கலெக்டர் அறிவுரை.!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் கன மழை வர வாய்ப்பு உள்ள நிலையில் தென்னை மரங்களை பாதுகாப்பது தொடர்பாக கலெக்டர் உமாமகேஸ்வரி சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார். 
அதில் நல்ல காய்ப்பு உள்ள தென்னந்தோப்புகளில் முதிர்ச்சியடைந்த அல்லது முதிர்ச்சியடையும் தருவாயிலுள்ள இளநீர்க் காய்களை பலத்த காற்று வீசத் தொடங்குவதற்குள் அறுவடை செய்ய வேண்டும். தென்னை மரங்களில் தலைப்பகுதியின் அடிப்பாகத்தில் அதிக எடையுடன் காணப்படும் தென்னை ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால், தென்னை மரங்களில் தலைப்பகுதியின் எடை குறைந்து, வேகமாக வீசும் காற்று தென்னை மரங்களின் தலைப்பகுதிகளை எளிதாக கடக்க முடியும் என்பதால், தோப்புகளிலுள்ள தென்னை மரங்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். 

வாய்ப்புள்ள இடங்களில், தென்னை மரங்களின் அடிப்பகுதியை மண்ணால் உயரமாக அணைக்க வேண்டும். இதனால் மரங்களுக்குக் கூடுதல் பலம் கிடைக்கும். உடனடியாகத் தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதையும், உரமிடுவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதையும் மீறி, தென்னை மரங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் விவசாயிகள் தங்கள் தென்னை மரங்களை காப்பீடு செய்துகொள்ளலாம். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இதேபோல தோட்டக்கலை பயிர்களையும் பாதுகாக்க அவர் அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments