மணமேல்குடி, ஆவுடையார்கோவில் உட்பட 12 இடங்களில் தொழிற்சங்கத்தினர் பொதுவேலை நிறுத்த போராட்டம்.!!தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டத்தில் 12 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தபால் நிலையம் முற்றுகை

தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டத் திருத்தங்கள், புதிய வேளாண் சட்டங்களை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் மாநிலம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் நேற்று பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச. மாவட்ட தலைவர் ரத்தினம் தலைமையில் தொழிற்சங்கத்தினர், நிர்வாகிகள் ஊர்வலமாக தலைமை தபால் நிலையத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதேபோல வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் அண்ணாசிலை அருகே உள்ள இந்தியன் வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ராமதுரை தலைமை தாங்கினார். மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். புதுக்கோட்டை கீழராஜ வீதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஜனநாயக தொழிற்சங்க ஒன்றிய அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர். எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் கிளைத்தலைவர் லதாராணி தலைமை தாங்கினார்.

12 இடங்கள்

தொழிற்சங்கங்களின் சார்பில் மாவட்டத்தில் 12 இடங்களில் நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கைதாகி விடுதலையாகினர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களால் அந்தந்த அலுவலகங்களில் பணியில் இருந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

அன்னவாசல்-பொன்னமராவதி

அன்னவாசலில் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய அமைப்பாளர் தேவராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தீன் தலைமை வகித்தார். இதில், சி.ஐ.டி.யூ., வாலிபர் சங்கம், ஆட்டோ தொழிற்சங்கம், கறிக்கடை தொழிலாளர் சங்கம், அனைத்து போக்குவரத்து சங்கத்தினர் மற்றும் சாலையோர வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில்-மணமேல்குடி

மணமேல்குடியில் தங்கவேலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவுடையார்கோவிலில், சி.ஐ.டி.யூ. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் முருகேஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் வீரையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கியில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் முகமதுஅலி ஜின்னா தலைமையில் தபால் நிலையம் அருகே தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அறந்தாங்கி பஸ் நிலையம் எதிரே மாவட்ட இணை செயலாளர் பத்மா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பொதுத்துறை அலுவலகங்களில் ஊழியர்களுக்கு வழங்குவது போல் போனஸ் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

அறந்தாங்கி-ஆலங்குடி

திருவரங்குளம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் தலைமையில் ஆலங்குடி தபால் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments