புதுக்கோட்டை மாவட்டத்தில் 3¼ லட்சம் பேர் எழுத, படிக்க தெரியாதவர்கள்... கலெக்டர் தகவல்.!!புதுக்கோட்டை மாவட்டத்தில் 3¼ லட்சம் பேர் எழுத, படிக்க தெரியாதவர்கள் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கற்போம் எழுதுவோம் இயக்கம்-புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட 1 கோடியே 24 லட்சம் பேர் முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களாக உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 19 ஆயிரம் பேர் எழுத, படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கினால் மட்டுமே கல்வியில் ஒட்டுமொத்த வளர்ச்சி என்கிற இலக்கை அடைய முடியும். 

இதனைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்காக ஒவ்வொரு கிராமங்கள், வார்டுகள் அளவில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில், அங்கன்வாடி மைங்களில் ஏற்கனவே பராமரிக்கப்படுகின்ற குடும்ப விவரம், சர்வே பதிவேட்டில் ‘கல்விநிலை’ என்கிற பகுதியில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோரின் விவரங்களை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளன. 

இதில் 1,987 ஆண்கள், 5,962 பெண்கள் என மொத்தம் 7,949 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களை ஒரு மையத்திற்கு 20 பேர் வீதம் 398 கற்றல் மையங்கள் 13 ஒன்றியங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தன்னார்வல ஆசிரியர்கள் மூலம் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் என கணக்கிட்டு, மாதம் ஒன்றிற்கு 40 மணி நேரம் கற்றல் கற்பித்தல் பயிற்சி நடைபெறும்.

இந்த கற்றல் பயிற்சியின் அடிப்படை தமிழ், அடிப்படை கணக்கு மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகியவை 3 மாதங்கள் கற்றுத் தரப்படும். 3-ம் மாத முடிவில் சிறுதேர்வு நடத்தப்பட்டு அவர்களின் கற்றல் நிலை சோதிக்கப்படும். இதைப்போல் 3 கட்டங்கள் நடத்தப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், சண்முகநாதன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில், சிறந்த பெற்றோர்-ஆசிரியர் கழகத்தை கொண்ட கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லக்ணாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள செவ்வாய்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கு விருதுகளை கலெக்டர் வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments