பொதுமக்கள் கோரிக்கை ஆவுடையார்கோவில் அருகே 57 ஆண்டுகளை கடந்த வெள்ளாற்று பாலத்தில் சிறுசிறு பள்ளம்..!அறந்தாங்கி அருகே திருச்சி-மீமிசல் மாநிலச்சாலையில் ஆவுடையார்கோவில் வெள்ளாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைத்து, பாலத்தை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவில் செல்லும் சாலையின் குறுக்கே காட்டாறான வெள்ளாறு ஓடுகிறது. வெள்ளாற்றில்மணல்குவாரி அமைத்து, மணல் அள்ளப்படும்வரை பெரும்பாலான மாதங்கள் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். இந்த காலக்கட்டத்தில் ஆவுடையார்கோவில், அமரடக்கி, மீமிசல், கோட்டைப்பட்டினம், திருப்புனவாசல் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமமக்கள் பொருட்களை வாங்கவும், மருத்துவ சிகிச்சைக்கும், கல்வி கற்பதற்கும், வங்கி சேவைக்கும் அறந்தாங்கிக்கே வந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வெள்ளாற்றை கடந்து அறந்தாங்கி பகுதிக்கு வந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலத்தில் அப்பகுதி மக்கள் அறந்தாங்கி பகுதிக்கு வந்து செல்ல முடியாத நிலை இருந்தது.


பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்த அப்போதைய மெட்ராஸ் மாகாண அரசு ஆவுடையார்கோவில் அருகே வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட ரூ.5 லட்சத்து 85 நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியைக் கொண்டு 436 அடி நீளத்தில் உயர்மட்ட பாலம் 1961ம் ஆண்டு மே மாதம் கட்ட துவங்கி 1963ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி நிறைவு பெற்றது. இந்த பாலத்தை 1963ம் ஆண்டு ஜுன் மாதம் 16ம் தேதி அப்போதைய மெட்ராஸ் மாகாண அரசின் பொதுபணித்துறை அமைச்சர் ராமையா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த பாலத்திற்கு தீரர் சத்தியமூர்த்தி பாலம் என பெயர் சூட்டப்பட்டது.

தற்போது இந்த பாலம் அமைந்துள்ள சாலை திருச்சி-மீமிசல் மாநிலச் சாலையாக உள்ளது. மேலும் இந்த பாலம் வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருச்சி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி ஏராளமான பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் கிழக்கு கடற்கரை சாலையுடன் இணையும் முக்கிய சாலையில் தீரர் சத்தியமூர்த்தி பாலம் அமைந்துள்ளதால், சுற்றுலா பேருந்துகள், சரக்கு லாரிகள், சரக்கு மினிலாரிகள், கார்கள் சென்று வருகின்றன.

ஆவுடையார்கோவில் அருகே வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு 57 ஆண்டுகள் ஆனநிலையில், பாலத்தின் மேல் பகுதியில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த மணலை சிலர் அள்ளி சென்றுவிட்டதால், பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் உள்ளது. 

இந்த பாலத்தில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலம் கட்டப்பட்டு 57 ஆண்டுகள் ஆனநிலையில் தற்போது பாலத்தின் மேல்பகுதியில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களை சரி செய்யப்படவில்லை. மேலும் மணல் திருட்டால் பாலத்தின் அடிப்பகுதிகளில் உறுதி தன்மை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆவுடையார்கோவில் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டு அறுபதாம் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ள தீரர் சத்தியமூர்த்தி பாலம், கடந்த சில ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள பல பாலங்களை விட பல மடங்கு உறுதியாக உள்ள நிலையில் தற்போது பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறுசிறு பழுதுகளை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தால், இந்த பாலம் நூற்றாண்டை கடந்தும் கம்பீரமாக நிற்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. 

எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஆவுடையார்கோவில் தீரர் சத்தியமூர்த்தி பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனே சீரமைப்பதுடன், தொடர்ந்து பாலத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Post a Comment

0 Comments