5-வது நாளாக டெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: கடும் போக்குவரத்து நெரிசலால் திணறும் டெல்லிமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லிக்கு பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான பஞ்சாப் விவசாயிகள் கடும் இன்னலுக்கு பின் தலைநகருக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்களில் ஒரு பகுதியினர், டெல்லி போலீசார் ஒதுக்கிய புராரி பகுதியில் உள்ள நிரங்காரி மைதானத்தில் போராடி வருகின்றனர்.

அதே நேரம் டெல்லியின் எல்லைகளான சங்கு, திக்ரி உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 5 நாட்களாக முகாமிட்டு, நெடுஞ்சாலைகளிலேயே போராட்டத்தை தொடர்கின்றனர். அவர்களை புராரி மைதானம் செல்லுமாறு மத்திய அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.

ஆனால் நேற்று முன்தினம் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய விவசாய அமைப்புகள், மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டன. 30-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், மத்திய அரசு நிபந்தனை எதுவும் இன்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி விவசாயிகள் தங்கள் போராட்டங்களை மீண்டும் தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக தொடர்ந்தது.

டெல்லியின் எல்லைகளிலும், புராரி மைதானத்திலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர். இந்த மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

புராரி மைதானம் ஒரு திறந்தவெளி சிறை எனவும், எனவே அங்கு செல்லமாட்டோம் எனவும் அறிவித்துள்ள அவர்கள், ஜந்தர் மந்தர் அல்லது ராம்லீலா மைதானத்தை போராட்டத்துக்காக ஒதுக்கினால், அங்கு செல்வது குறித்து பரிசீலிப்போம் எனவும் கூறியுள்ளனர்.

இது குறித்து திக்ரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுக்விந்தர் சிங் என்ற விவசாயி கூறும்போது, ‘டெல்லி எல்லைகளிலேயே எங்கள் போராட்டத்தை தொடர்வோம். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் எங்களிடம் கைவசம் உள்ளன. இங்கிருந்து செல்வதென்றால், அது ஜந்தர் மந்தருக்கு மட்டுமே செல்வோம். வேறு எங்கும் செல்லமாட்டோம்’ என்று கூறினார்.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை திக்ரியில் இருந்து நகரமாட்டோம் என கூறிய சிங், எத்தகைய குளிரையும், சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதே நேரம் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் டெல்லிக்கு வரும் அனைத்து வழிகளையும் அடைப்போம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதைப்போல சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கைகளில் பேரத்துக்கு இடம் இல்லை. ஒரு தீர்க்கமான போருக்காகவே நாங்கள் டெல்லிக்கு வந்திருக்கிறோம். எங்கள் மனதின் குரலை (மன்கீபாத்) பிரதமர் மோடி கேட்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்துள்ள சிங்கு எல்லை பகுதியில் விவசாயிகளுக்கு மருத்துவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 2 டாக்டர்கள் தனிப்பட்ட முறையில் விவசாயிகளுக்கு அடிப்படை மருந்துகளையும், முக கவசங்களையும் வழங்கி வருகின்றனர்.

இதற்கிடையே டெல்லியின் எல்லைகள் மற்றும் புராரி மைதானத்தில் நடந்து வரும் விவசாயிகள் முற்றுகையால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக திக்ரி, சங்கு எல்லைகள் மூடப்பட்டு உள்ளதால் அந்த வழியாக அண்டை மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே போக்குவரத்தை மாற்றுப்பாதையில் போலீசார் திருப்பி விட்டு உள்ளனர். மக்கள் இந்த பாதைகளை தவிர்த்து மாற்றுப்பாதைகளை தேர்ந்தெடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதிக வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் செல்வதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் தொடர்ந்து டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் டெல்லி-காசியாபாத் சாலையில் கான்கிரீட் கட்டைகளை வைத்து போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

இவ்வாறு டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து எதுவும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறியிருந்த தோமர், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எதுவும் நேராது எனவும் கூறியிருந்தார். மேலும் மத்திய அரசுடன் 3-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விவசாயிகளுக்கு அவர் அழைப்பும் விடுத்திருந்தார்.

டெல்லியின் எல்லைகளிலும், புராரி மைதானத்திலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குவிந்து தீவிர போராட்டம் நடத்தி வருவதால் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments