ஏப்ரலில் தமிழக சட்டசபை தேர்தல்: ஒரே கட்டமாக நடத்த முடிவு
தமிழக சட்டசபைக்கு, முன்கூட்டியே, ஒரே கட்டமாக ஏப்ரலில் தேர்தல் நடத்த,தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டிச., 15க்குள், அட்டவணை தயாரிக்கதிட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த, துணை தேர்தல் கமிஷனர் சந்தீப் ஜெயின், டிச., 9ல் தமிழகம் வரவுள்ளார்.

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபைகளின் பதவிக்காலம், மே - ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இந்த சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளை, தேர்தல் கமிஷன் ஏற்கனவே துவக்கியுள்ளது.


கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில், சமீபத்தில், பீஹார் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதையடுத்து, ஐந்து மாநில சட்டசபை தேர்தலையும், திட்டமிட்டபடி நடத்த, தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
ஆய்வு கூட்டம்

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், மே மாதத்தில், கோடை வெயில் அதிகமாக இருக்கும். அதனால், முன்கூட்டியே, ஏப்ரலில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, கமிஷனர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் உள்ளிட்டோர், வரும், 2ல் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அப்போது, இது குறித்து முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் நடத்துவது குறித்து, துணை தேர்தல் கமிஷனர்கள், இந்த ஐந்து மாநிலங்களுக்குச் சென்று, ஆய்வு கூட்டங்களை நடத்துவது தொடர்பான அட்டவணையும் தயார் செய்யப்பட உள்ளது.


வரும், டிச., மற்றும் அடுத்தாண்டு ஜனவரியில், இந்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, துணை தேர்தல் கமிஷனர் சந்தீப் ஜெயின், டிச., 9ல் தமிழகத்தில் ஆய்வு கூட்டம் நடத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு துணை கமிஷனர் உமேஷ் சின்ஹா, ஜனவரியில் தமிழகம் வந்து, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். அப்போது, தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் 32 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் அவர், தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவர்.

இவர்களது பயண திட்டம் மற்றும் மாநில அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டங்கள் குறித்த தேதிகளை, டிச., 15க்குள் இறுதி செய்ய, திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமை கமிஷனர் தலைமையில், டிச., 2ல் நடக்கும் கூட்டத்தில், பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட உள்ளது. அடுத்தாண்டு மே மாதத்தில், கோடை வெயில் அதிகம் இருக்கும் என்பதால், முன்னதாகவே தேர்தலை நடத்துவது குறித்து முக்கியமாக ஆய்வு செய்யப்பட உள்ளது.

சட்டசபை தேர்தல்களை நடத்துவதற்கு, துணை ராணுவப் படைகளின் தேவை, மாநில தேர்தல் அதிகாரிகள் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தின் அறிக்கை, மாநிலங்களில் நடக்கும் பள்ளி, கல்லூரி தேர்வுகள், வானிலை, உள்ளூர் திருவிழாக்கள் உள்ளிட்டவை குறித்தும் ஆராயப்பட உள்ளது.பீஹார் தேர்தல் நடத்தியதில் கிடைத்த அனுபவம் குறித்தும் ஆராயப்பட உள்ளது. தலைமை கமிஷனர் தலைமையிலான இந்தக் கூட்டத்துக்குப் பின், சட்டசபை தேர்தல் தொடர்பான பணிகள் மேலும் விறுவிறுப்படையும் என, எதிர்பார்க்கலாம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments