திருவாரூர் - காரைக்குடி ரயில்; கேட் கீப்பர்களை நியமிக்காமல் சேவையை நிறுத்துவதா? - வலுக்கும் கோரிக்கை




திருவாரூர் - காரைக்குடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கைவிடுத்திருக்கிறது.

நிறுத்தப்பட்டிருக்கும் திருவாரூர் - காரைக்குடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டுமென தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்  சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது.

திருவாரூர்... சோழர்கால தலைநகராக விளங்கிய புகழ்பெற்ற நகரம்; தற்போது  மாவட்ட தலைநகரம். இங்கு வசிக்கும்  பெரும்பாலான மக்கள், விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். திருவாரூரைச் சுற்றிக் கோயில்கள் மற்றும் சுற்றுலாதலங்கள் பல இருக்கின்றன. இவற்றைக் காண நாட்டின் பல இடங்களிலிருந்தும் ஏராளமானோர் தினமும் வருகின்றனர்.  பயணக் கட்டணம் குறைவு என்பதன் காரணமாக மக்கள் ரயில்  பயணங்களையே விரும்புகின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக போதுமான சேவைகள் கிடைக்கவில்லை.

அகல ரயில் பாதைப் பணிகள் காரணமாக திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக ரயில் சேவை இல்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு 2019, ஜூன் 1-ம் தேதி முதல் ரயில் சேவை பெயருக்குத் தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் கேட் கீப்பர்கள் இல்லாததால், 146 கி.மீ தூரத்தைக் கடப்பதற்கு ஏறக்குறைய 8 மணி நேரம் ஆனது. அதனால், மக்கள் அதில் பயணிக்க விரும்பவில்லை. நேரத்தைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் கேட் கீப்பர்களை நியமிப்பதற்கு பதிலாக அந்த ரயில் சேவையை நிறுத்திவிட்டனர். இது பற்றி நாடாளுமன்றத்தில் நாகப்பட்டினம் எம்.பி செல்வராஜ் பலமுறை முறையிட்டார். மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத் தலைவரைச் சந்தித்தும் நேரில் கோரிக்கை மனு அளித்தார். ஆனால் அதற்கு இன்றுவரை பலனில்லை.


வரும் புத்தாண்டுக்குள் இந்த திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் விரைவு ரயில் மற்றும் பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்திருக்கிறது. அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், விரைந்து ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments