செல்போன் விளையாட்டில் மூழ்கிய சிறுவர்கள்; கைப்பந்து விளையாட வைத்து அறிவுரை வழங்கிய போலீஸார்
பாகூர் அருகே செல்போன் விளையாட்டில் மூழ்கிய சிறுவர்களுக்கு கைப்பந்து வாங்கிக் கொடுத்து விளையாட வைத்த போலீஸாரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் சிலர் அதனைப் பயன்படுத்தி ஓவியம் வரைதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு பொழுதைக் கழித்து வருகின்றனர். ஆனால், சில மாணவர்கள் தொடர்ந்து செல்போன் விளையாட்டிலேயே மூழ்கியுள்ளனர்.இந்த செல்போன் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் நடைபெறுகிறது. இந்தநிலையில் புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்த குருவிநத்தம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி வருவதாக பாகூர் போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து பாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்மணி, துணை உதவி ஆய்வாளர் சவரி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

அப்போது அங்கு குழுவாக அமர்ந்தபடி சிறுவர்கள் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவதைக் கண்ட போலீஸார் அவர்களுடைய செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் செல்போன் விளையாட்டால் பல்வேறு தீமைகள் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டிய போலீஸார், ஆன்லைன் விளையாட்டை விளையாடக்கூடாது என அறிவுரை வழங்கினர். தொடர்ந்து அந்தச் சிறுவர்களைக் கையோடு அழைத்துச் சென்ற போலீஸார் புதிய கைப்பந்து ஒன்றை வாங்கிக் கொடுத்து அவர்களை அங்குள்ள மைதானத்தில் விளையாட வைத்தனர்.

சுமார் 2 மணி நேரம் வரை விளையாட வைத்த போலீஸார் உடலுக்கும், மனதுக்கும் வலிமை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுகளை விளையாட வேண்டும் எனவும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைக் கேட்ட சிறுவர்களும் இனி செல்போன் விளையாட்டுகளை விளையாடமாட்டோம் என உறுதியளித்தனர்.

இதன் பின்னர் சிறுவர்களை போலீஸார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். போலீஸாரின் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் பலரும் வரவேற்றுப் பாராட்டினர். இதுபற்றி போலீஸார் கூறும்போது, ‘‘செல்போன் விளையாட்டை விளையாடுவதால் மாணவர்கள் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை வரை செல்கின்றனர். தேவையற்ற செல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. இவற்றையெல்லாம் தவிர்க்கவும், மனமாற்றத்தை ஏற்படுத்தவும் கைப்பந்து வாங்கிக் கொடுத்து விளைாட வைத்தோம். சிறுவர்கள் எந்தவித மன அழுத்தத்துக்கும் ஆளாகக் கூடாது என்பதே எங்களுடைய விருப்பம்’’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments