குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.!!குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட கத்தலூர் ஊராட்சி ரோட்டாத்துப்பட்டி மற்றும் குளத்தாத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் தெரிவித்தும் மின் மோட்டார் சரி செய்யப்படவில்லை. இதனால், கடந்த பல நாட்களாக போதிய குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர தேவைகளுக்கு அருகில் உள்ள கிணற்றிலும், குளத்திலும் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கு மேலாகியும் மின்மோட்டார் சரிசெய்யப்பட்டு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், கத்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை(அதாவது இன்று) குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். 

அதனை ஏற்று, குடிநீர் பிரச்சினை மற்றும் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments