மாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்




திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் இருந்து விமான நிலையம் வழியாக மாத்தூர் ரிங் ரோடு வரை சாலையை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறையினரால் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதன் முதற்கட்ட பணியாக சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் வீடுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.



இதை தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதையொட்டி கீரனூர் துணை போலீஸ்சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் தலைமையில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், காமராஜ் உள்ளிட்ட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சந்திரன் தலைமையில், குளத்தூர் தாசில்தார் பழனிசாமி முன்னிலையில் திருச்சி புதுக்கோட்டை மாவட்ட எல்லையான ரவுண்டானாவில் இருந்து மாத்தூர் ரிங் ரோடு வரை நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கடைகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.

வீடுகள், கடைகள் அகற்றம்

முன்னதாக வீடு மற்றும் கடைகளில் இருந்த பாத்திரங்கள், பொருட்கள், பீரோ, கட்டில், டி.வி. உள்ளிட்ட வீட்டு தளவாட பொருட்கள் அனைத்தையும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து பத்திரமாக வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.

வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும்போது பெண்கள் அழுதுகொண்டே இனி நாங்கள் எங்கு செல்வோம் என்று கூறி சோகமாக நின்றது பரிதாபமாக இருந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்ந்து மாலை வரை நடைபெற்றது.

இதில் 200-க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் மற்றும் பயணிகள் நிழற்குடைகள், மத்திய கூட்டுறவு வங்கி கட்டிட முகப்பு உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments