குடிமராமத்து பணியால் குளங்கள் நிரம்பின: நிலத்தடி நீர் மட்டம் 1.35 மீட்டர் உயர்வு கலெக்டர் தகவல்
திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி மற்றும் பேரையூர் பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் குடிமராமத்து செய்யப்பட்ட மழைநீர் நிரம்பிய நீர் நிலைகளை கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-


புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்காலத்திற்கு முன்பாகவே குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளங்கள், கண்மாய்கள், வரத்து வாய்க்கால்கள் தூர்வாரி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் பொதுப்பணித்துறையின் சார்பில் 43 குளங்கள் ரூ.21 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலும், 250 கி.மீ நீளத்தில் ரூ.9 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 650 குளங்கள் ரூ.14 கோடியே 25 லட்சத்திலும் எனமொத்தம் நடப்பாண்டிற்கு இதுவரை ரூ.45 கோடியே 52 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது.

நிலத்தடி நீர்மட்டம்

நீர்மேலாண்மை திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் சிறந்து விளங்குகிறது. இதன் பயனாக மாவட்டத்தில் அக்டோபர் மாதம் நிலத்தடி நீர்மட்டம் 1.35 மீட்டர் உயர்ந்துள்ளது. தற்போது பரவாலாக பெய்து வரும் மழையினால் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் மழைநீர் வடிவதற்கும் குடிமராமத்து திட்டம் சிறந்து விளங்குகிறது. பருவமழையால் இக்குளங்கள் நீர் நிரம்பி இருப்பது பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரையில் பொதுப்பணித்துறையின் மூலம் துார்வாரப்பட்ட 43 குளங்களில் இதுவரை 8 குளங்கள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளன. இதே போன்று மாவட்டத்தில் உள்ள 3, 848 சிறு பாசனக்குளங்களில் 3,238 குளங்கள் 25 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. 610 குளங்கள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பிட வாய்ப்பாக அமைந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்து திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ஜோஸ்பின் நிர்மலா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments