4 சென்ட்டில் வீடு, 16 சவரன் நகை – வளர்ப்பு மகள் கவிதாவுக்கு ஊர் மெச்ச திருமணம் நடத்திய தந்தை அப்துல் ரசாக்!




கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர், 14 வருடங்களுக்கு முன்பு தத்தெடுத்த தனது வளர்ப்பு மகள், தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதாவுக்கு விமரிசையாக திருமணம் செய்து வைத்தது, தற்போது, சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த செய்தியாக உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திரிபிரயார் பகுதியைச் சேர்ந்தவர் ரசாக். ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. இவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு ஒரு சிறுமி, அழுக்குத் துணியுடன் தெருவில் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அந்தச் சிறுமிக்கு வயது 8. ஏற்கனவே ரசாக்கிற்கு 3 பிள்ளைகள் இருந்த நிலையில், 4வது பிள்ளையாக கவிதாவையும் வளர்க்கத் தொடங்கியுள்ளார்.

இதனிடையே சிறுமியின் பெயர் கவிதா என்றும், அவரது பெற்றோர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கண்டுபிடித்த ரசாக், அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களும் கவிதாவை தங்கள் ஊருக்கு அழைத்துச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் கவிதா, தனது வளர்ப்பு தந்தை ரசாக்கை பிரிய விரும்பவில்லை.

இந்நிலையில் திருமண வயதை நெருங்கிய கவிதாவுக்கு, வளர்ப்பு தந்தை  ரசாக் நல்ல மாப்பிள்ளையை பார்த்து, தனது செலவில் விமரிசையாக திருமணம் செய்து வைத்துள்ளார். ஸ்ரீ ஜித் என்ற தனியார் நிறுவன ஊழியருக்கும் கவிதாவுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தனது வீட்டின் அருகே,  தனக்கு சொந்தமான 4 சென்ட் இடத்தில் வீடு ஒன்றை கவிதாவுக்கு கொடுத்துள்ளார் வளர்ப்புத் தந்தை ரசாக். கவிதாவுடன் சகோதரிகளாக வாழ்ந்து வந்த, ரசாக்கின் மகள்கள், கவிதாவுக்கு 16 சவரன் தங்க நகைகளை பரிசளித்துள்ளனர். இவ்வாறாக ஊர் மெச்ச விமரிசையாக நடந்துள்ளது திருமணம்.
 
மதம், சாதி, மொழி வேறுபாடுகளை கடந்து, நடைபெற்ற இந்த மனிதநேய திருமணம் தான் தற்போது, வலைதளங்களில் ஹைலட் செய்தியாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments