தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தராத அலுவலர்கள் மீது நடவடிக்கை.! ஆணையர் எச்சரிக்கை.!!புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாநில தகவல் ஆணையர் விசாரணை முகாம் மாநில தகவல் ஆணையர் முனைவர் ஆர்.பிரதாப்குமார் அவர்கள் தலைமையில் (18.12.2020) அன்று நடைபெற்றது. பின்னர் மாநில தகவல் ஆணையர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

தமிழ்நாடு தகவல் ஆணையம் திரு.ராஜகோபால் அவர்கள் தலைமையின் கீழ் நான்கு ஆணையர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆணையத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 1,300 முதல் 1,500 மனுக்கள் வரை தீர்வு காணப்பட்டு வருகிறது. பொதுமக்களின் மனுக்களுக்கு தகவல் தராதவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி பிரிவு-20 (1) ன் கீழ் அபராதம் வசூலிக்கப்படுகிறது. பிரிவு 20 (2) ன் கீழ் நிர்வாகத்துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டு வருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் 90 சதவீத கேள்விகளுக்கு அலுவலர்கள் மூலம் உரிய பதில் அளிக்கப்படுகிறது. 10 சதவீதம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் இதுவரை ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6 (1) ன் கீழ் வருவாய்த்துறை எனில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பொது தகவல் அலுவலர் ஆவார். அவரிடம் முறையீடு செய்ய வேண்டும்.

இரண்டாம் மேல்முறையீட்டு மனுவினை ஆணையத்திற்கு நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இதுகுறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு பெற வேண்டும். 

பிரிவு 6 (1) ன் கீழ் மனுக்கள் அனுப்பப்பட்டு நேரடியாக தகவல் ஆணையத்திற்கு அனுப்பப்படுகிறது. மேலும் எவ்வித பிரிவும் இல்லாமல் நேரடியாக தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு மனுக்கள் தவறாக  அனுப்பப்படுகிறது. எனவே ஆணையத்திற்கு தகவல் கேட்டு மனுக்கள் அனுப்பும் முறைகள் குறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு பெற வேண்டும். இன்றைய விசாரணையில் இதுவரை மனுக்களுக்கு உரிய தகவல் தெரிவிக்காத 3 அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக தவறான தகவல் கேட்கும் மனுதாரரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். 

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு சென்னை அண்ணா சாலையில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய கட்டடத்தினை தமிழக அரசு வழங்கி உள்ளது. இதற்காக ஆணையத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இக்கட்டடம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கட்டடம் பயன்பாட்டிற்கு வரும்பொழுது பொதுமக்கள் மற்றும் பொது தகவல் அலுவலர்களுக்கு தேவையான வசதிகளுடன் சிறப்புடன் செயல்படும். மேலும் பொதுமக்களுக்கு தகவல் அளிப்பதில் தமிழ்நாடு தகவல் ஆணையம் இந்தியாவில் இரண்டம் இடத்தில் உள்ளது. இவ்வாறு மாநில தகவல் ஆணையர் முனைவர் ஆர்.பிரதாப்குமார அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இம்முகாமில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments