கொரோனா ஊரடங்கில் தந்தைக்கு உதவி - மரக்கதவு சிற்பங்களை அழகாக செதுக்கும் 7-ம் வகுப்பு மாணவி
கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்த ஆறுதல் அளித்தபோதிலும், அதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பலர் இன்னும் அதிலிருந்த மீளமுடியாமல் தவித்து வருவது ஆங்காங்கே இருந்து வருகிறது.

இருந்த தொழிலை விட்டு இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர். படிப்பு, கல்வித்தகுதியை மறந்து கிடைக்கும் தொழிலை செய்ய முன்வந்தவர்கள் ஏராளம். ஆனாலும் இருக்கும் பரம்பரை தொழிலை கைவிட மனமின்றி, தன்னை சார்ந்தவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் தொழிலை கற்றுத்தந்த பெருமை நிகழ்வு புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தின் பின்பக்கம் உள்ள தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார், தச்சுத் தொழிலாளி. இவரது மகள் 12 வயதான அஞ்சனா ஸ்ரீ.

தந்தைக்கு உதவியாக உளியை கையில் எடுத்த அஞ்சனா, இப்போது கை தேர்ந்த கலைஞராகி அசத்திக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது தந்தைக்கு உதவியாக உளியை பிடித்த அவருக்கு கொரோனா ஊரடங்கு முழுவதுமாக தச்சுத் தொழிலை கற்க நேரத்தை அளித்தது.

கதவில் இடம்பெற வேண்டிய டிசைன்களை அவரே சொந்த கற்பனையில் வரைகிறார். இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த டிசைன்களையும் அவளே யாருடைய உதவியும் இல்லாமல் செதுக்குகிறார்.

ஒரு இரட்டை கதவுக்கான டிசைன் மற்றும் சிற்ப வேலைகளுக்கு 4 நாள் மட்டுமே அஞ்சனா எடுத்துக்கொள்வதாக அவரது தந்தை முத்துக்குமார் பெருமிதம் தெரிவித்தார்.

கலை ஆர்வம் பற்றி அஞ்சனா கூறும்போது, இங்கு 70 முதல் 80 வகையான உளிகள் உள்ளன. எந்தவகையான மரத்திற்கு எந்த உளி பயன்படுத்த வேண்டும் என தெரிந்திருப்பது முக்கியமானது. அதன்பின்னர் வரை படத்திற்கு ஏற்ப செதுக்க வேண்டியது தான். இவை அனைத்தையும் என் தந்தையிடம் கற்றுக்கொண்டேன். அவரே என் குரு. அவரை பின்தொடர்கிறேன் என்றார்.

சிலம்பம், பரதநாட்டியம் போன்ற கலைகளையும் அஞ்சனா கற்று வருகிறார். கொரோனா விடுமுறையில் துள்ளி விளையாடும் வயதை கொண்ட அஞ்சனா தற்போதே தந்தைக்கு உதவியாக தொழிலை கற்றுக்கொண்டு அதில் காட்டும் ஆர்வம் மற்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments