ஆரோக்கியத்துடன் வாழ பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் இலவச சித்த மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தொடங்கி வைத்து பேசியதாவது:-சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ சிகிச்சை முறையில் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை. இதேபோல கொரோனா தொற்று காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர்.

பாரம்பரிய உணவுகள்

கொரோனா சித்த மருத்துவ சிகிச்சையில் எண்ணற்ற பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்ததுடன் இதன் பயனாக சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்தும் அனைவரும் அறிந்து கொண்டனர். நல்ல முறையில் கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் நவீன கால வாழ்க்கை முறைகளில் பொதுமக்கள் நமது பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் நலத்திற்கு நன்மை தரும் பாரம்பரிய உணவுகளான கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற பல்வேறு உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். இதனால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நோயற்ற நல்வாழ்வு வாழ முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலிகை கண்காட்சி

முகாமில் மருத்துவ குணம் அடங்கிய பல்வேறு மூலிகைகள் கொண்ட மூலிகை கண்காட்சியும், பாரம்பரிய உணவுப் பொருட்கள் கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதீஜா, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மரியலூயிஸ் பெக்கி ஹோம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments