சர்க்கரை நோயால் இரு கால்களையும் இழந்தவர்; கோவை அரசு மருத்துவமனையில் எடை குறைந்த செயற்கைக் கால்கள் பொருத்தம்
சர்க்கரை நோயால் இரு கால்களையும் இழந்தவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக எடை குறைந்த செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன.

கை, கால்களை இழந்தவர்கள் செயற்கை உறுப்புகளைச் செலவில்லாமல் பொருத்துவதற்கு, முன்பு சென்னை செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையிலேயே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எடை குறைந்த செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.இதன்மூலம், கோவை அரசு மருத்துவமனை முட நீக்கியல், விபத்து கிசிச்சைத் துறை இயக்குனர் வெற்றிவேல் செழியன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சர்க்கரை நோயால் இரு கால்களையும் இழந்த சோமனூரைச் சேர்ந்த சின்னசாமி (49) என்பவருக்கு எடை குறைந்த செயற்கைக் கால்களை வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவர் வெற்றிவேல் செழியன் கூறும்போது, “சாலை விபத்து மற்றும் சர்க்கரை நோயால் மாதந்தோறும் 10க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் கை, கால்களை அகற்ற வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு, கை, கால்களை இழந்தவர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்குக்கூட அடுத்தவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.

வெளியில் செயற்கைக் கால் பொருத்தினால் ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை எடுத்துவந்தால் போதுமானது.

காலை அகற்றிய பிறகு ஏற்படும் புண், வீக்கம் ஆகியவை முழுமையாகக் குறைந்தபின்பே செயற்கைக் கால் பொருத்த முடியும். எனவே, இதற்காக பிரத்யேகமாக 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. செயற்கை உறுப்புகளைப் பொருத்திய பிறகு, யார் துணையும் இல்லாமல் தானாக நடக்கும் அளவுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதுவரை இங்கு 15 பேருக்கு வெற்றிகரமாக செயற்கை கை, கால்களைப் பொருத்தியுள்ளோம்" என்றார்.

கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஒருவருக்கு இரு செயற்கைக் கால்களைப் பொருத்திய மருத்துவர்களுக்கு மருத்துவமனையின் டீன் காளிதாஸ் பாராட்டு தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments