கொட்டும் மழையில் திறந்து கிடந்த கால்வாயை மூடிய சிறுவன்-சிறுமிக்கு குவியும் பாராட்டு
இன்றைய அவசர உலகில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. ஆனால் இது நம்மில் பலருக்கும் இல்லை என்பதே உண்மை.

 
இதனை மாற்றும் வகையில் சமூக பொறுப்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமிபுரத்தை சேர்ந்த அசோக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயாணி (11), விக்னேஷ் (8) நடந்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

கடந்த 8-ந்தேதி கிருஷ்ணவேணியும், விக்னேசும் கொட்டும் மழையில் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரம் கழிவுநீர் செல்லும் மழைநீர் கால்வாய் திறந்து கிடப்பதை கண்டனர். அதில் யாரும் விழுந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்த அவர்கள் தடுப்புகள் வைக்க முடிவெடுத்தனர்.

தேவயாணி அங்கிருந்த விளம்பர பதாகை கட்ட பயன்படுத்தும் ‘ஆங்கிளை’ எடுத்து கால்வாய் மீது வைத்து அதன் மீது பலகை ஒன்றை வைத்து மூடினார்.

கால்வாய் மூடும் பணியை அக்காள் செய்து கொண்டிருந்தபோது அவர் மழையில் நனையாமல் இருக்க விக்னேஷ் குடை பிடித்தார். அவர் சமூக பொறுப்புடன் சகோதர பாசத்தையும் வெளிப்படுத்தினார். இந்த காட்சியை அவ்வழியே சென்ற பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியதால் அக்காள் தம்பியான தேவயாணி, விக்னேசை அனைவரும் பாராட்டினர்.

அவர்களுக்கு முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

அக்கா, தம்பியை நேரில் அழைத்து பாராட்டிய தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு 

இந்த நிலையில் தீயணைப்பு துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நேற்று குழந்தைகள் தேவயாணி, விக்னேஷ் மற்றும் அவர்களது பெற்றோர் அசோக்குமார் - கிருஷ்ணவேணி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார்.

மேலும் சமூக பொறுப்புடனும், பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் செயல்பட்ட தேவயாணி, விக்னேசுக்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கினார். குழந்தைகளின் கல்விக்கு எதிர்காலத்தில் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தேவயாணி - விக்னேசின் செயல் பொறுப்பற்ற அதிகாரிகளுக்கும், சமூக பொறுப்பில்லாமல் சுற்றி வருபவர்களுக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments