புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கலெக்டர் வழங்கினார்




அடையாள அட்டை
தேசிய வாக்காளர் தினம் புதுக்கோட்டையில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் அரசு ஊழியர்கள், வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன்பின் புதிய வாக்காளர்களுக்கு மின்னணு முறையில் புகைப்படத்துடன் கூடிய வண்ண அடையாள அட்டையினை கலெக்டர் உமாமகேஸ்வரி வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று அனைத்து வாக்காளருக்கும் வாக்களிக்குமாறு அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தேசிய வாக்காளர் தினம் குறித்து விழிப்புணர்வை பெற்று தேர்தலில் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையினை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

விழிப்புணர்வு ஊர்வலம்
முன்னதாக புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் இருந்து வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகரமன்றத்தை வந்தடைந்தது.
இதில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்ரமணியன், தாசில்தார் முருகப்பன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பாலகோபாலன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வீடு, வீடாக வினியோகம்
இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 20-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் 24,384 ஆண் வாக்காளர்கள், 28,728 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தம் 53 ஆயிரத்து 124 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அந்தந்த வாக்குச்சாவடிகளில் நிலைய அலுவலர் மூலம் வீடு, வீடாக வினியோகிக்கும் பணி நடைபெறும் எனவும், அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். 
இதேபோல பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் இடம்பெயர்ந்தவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை இ-சேவை மையங்களில் வினியோகிக்கப்படும். இதனை ரூ.25 செலுத்தி புதிய அட்டையினை பெற்றுக்கொள்ளலாம் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments