கோட்டைப்பட்டினம் வாலிபர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்து 28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துவந்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு.!வாலிபர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து கைதான முதியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் இக்பால் தெருவை சேர்ந்தவர் ஆசீர்வாதத்தின் மகன் சாமுவேல் (வயது 20). கூலித்தொழிலாளியான இவரது தங்கை ரபேக்காலை, கடந்த 1990-ம் ஆண்டு மே மாதம் 31-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த வேலாயுத பெருமாள் கேலி கிண்டல் செய்தார். இதை சாமுவேல் தட்டிக்கேட்டார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாமுவேலை, வேலாயுத பெருமாள் கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும் சாமுவேலின் தாய் தடுக்க வந்த போது, அவரது தாயையும் தாக்கினார். 

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலாயுதபெருமாளை கைது செய்தனர். அப்போது அவருக்கு வயது 35 ஆக இருந்தது. கைதான அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட பின் கடந்த 1991-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின் வேலாயுத பெருமாள் தலைமறைவானார். வழக்கில் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டம், சொர்ணமடம் பகுதியில் நம்பியூரில் இருந்த வேலாயுத பெருமாளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகி 28 ஆண்டுகளுக்கு பின் அவர் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான அவரை மீண்டும் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். சாமுவேல் கொலை வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் மாலிக் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சாமுவேலை கொலை செய்த வேலாயுதபெருமாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், கொலை செய்யப்பட்ட சாமுவேலின் தாயை தாக்கியதற்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளார். வேலாயுதபெருமாளுக்கு தற்போது 65 வயதாகிறது.

சிறைதண்டனை விதிக்கப்பட்ட வேலாயுத பெருமாள் கோட்டைப்பட்டினம் பகுதியில் அப்போது பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். தலைமறைவான பின்பும் நம்பியூரில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவருக்கு 2 மனைவிகள் எனக்கூறப்படுகிறது. கொலையான சாமுவேலின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் இடையாங்குடி ஆகும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments