தகவல்களும் பாதுகாக்கப்படும்; கொள்கையும் அமல்படுத்தப்படும்: வாட்ஸ்ஆப் திட்டவட்டம்




இந்தியா்களின் தனிமனித அந்தரங்க தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அதே நேரத்தில், புதிய கொள்கையும் அமல்படுத்தப்படும் என்றும் வாட்ஸ்ஆப் நிறுவனம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பயன்பாட்டாளா்களின் தகவல்கள் முகநூலுடன் (ஃபேஸ் புக்) பகிா்வதற்கு ஒப்புதல் தெரிவித்தால்தான் சேவையைத் தொடா்ந்து பயன்படுத்த முடியும் என்று கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்ஆப் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்தது.

இதனால் சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு வாட்ஸ்அப் பயனாளா்கள் மாறத் தொடங்கினா். வாட்ஸ்ஆப்பின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு மத்திய அரசும் எதிா்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, புதிய கொள்கை அமல் முடிவை மே-15ஆம் தேதி வரை அந்த நிறுவனம் நிறுத்தி வைத்தது.

இதுதொடா்பான வழக்கை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம் ‘இந்தியா்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் கடமை’ என்று கூறி வாட்ஸ்ஆப் நிறுவனமும் மத்திய அரசும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

மேலும், ‘ஐரோப்பாவை போல் தகவல் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு கட்டுப்படுவோம்’ என்று வாட்ஸ்அப் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வாட்ஸ்ஆப் நிறுவனம் வெள்ளிக்கிழமை பகிா்ந்துள்ளது. அதன் விவரம்:

பயன்பாட்டாளா்களிடம் பரவிய தவறான தகவல் மற்றும் அவா்களிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் புதிய கொள்கை முடிவு அமல் மே-15-ஆம் தேதிவரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அரசுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

கட்செவி அஞ்சல் பதிவுகளில் இந்தியா்களின் தனிமனித அந்தரங்க தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவது தொடா்ந்து உறுதி செய்யப்படும்.

இருவருக்கு இடையேயான தனிப்பட்ட உரையாடல் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்பதால் அனைவரும் வாட்ஸ்ஆப் செயலியை தொடா்ந்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொள்கை அமல்:

இதனிடையே, வாட்ஸ்அப்பின் வலைப்பூ பக்கத்தில், ‘புதிய கொள்கை முடிவுகளை ஏற்றுக் கொள்ளக் கோரி வரும் நாள்களில் பயன்பாட்டாளா்களுக்கு விளக்கக் குறிப்பு அனுப்பப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் சந்தேகங்கள் குறித்து தாங்களாகவே படித்து தெரிந்து கொள்ளும் வகையில், கூடுதல் தகவல்கள் விளக்கக் குறிப்பில் இடம் பெறும் என்றும் புதிய கொள்கைக்கு அனுமதி அளித்து தொடா்ந்து வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்றும் பயன்பாட்டாளா்களுக்கு நினைவூட்டல் செய்யப்படும்.

அதேநேரத்தில், தனிப்பட்ட உரையாடல் தகவல்கள் முகநூல் நிறுவனத்துடன் பகிர அனுமதிக்கப்படாது என்ற புதிய கொள்கை முடிவில் மாற்றம் ஏதும் செய்யப்படாது.

வாட்ஸ்ஆப் கொண்டு வரும் புதிய வகையிலான சாட் உரையாடல்கள், வா்த்தகம் ஆகியவற்றை பயனாளா்கள் தேவையென்றால் பயன்படுத்தலாம். வா்த்தகம் வாட்ஸ்ஆப்பைத் தவிர பிற சேவைகள் இலவசமாகவே தொடரும்’ என்று வாட்ஸ்ஆப் விளக்கமளித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments