மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!!!



மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு 20.02.2020 இன்று சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் பேரா. முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் கூடியது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழுவிற்கான தேர்தல் நடைபெற்றது. தலைவராக பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளராக சகோ. ப. அப்துல் சமது, பொருளாளராக சகோ. இ. உமர் ஆகியோர் ஏகமனதாக பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இப்பொதுக்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மமக உறுப்பினருமான அஸ்லம் பாஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் சுலைமான் ஹாஜியார், காரைக்கால் மவ்லவி யூசுப் எஸ்.பி, தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சன்கோல்டு ஹசன், நெல்லை மாவட்ட துணைத் தலைவர் ஏர்வாடி முகைதீன், தமுமுக களப்பணியின் போது மறைந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த முஹம்மது அப்ஸர் ஆகியோர் மறைவுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் மறுமை வாழ்க்கைக்காக வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் மத்திய அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு போராட்டங்களின் போது உயிர் நீத்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அச்சங்குளம் பட்டாசு தொழிற்சாலையில் அண்மையில் நடைபெற்ற வெடிவிபத்தில் சிக்கி இறந்த தொழிலாளர்கள் மற்றும் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: கொரோனாவும் பாராட்டும்

மனித உயிர்களோடு விளையாடி, உலக மக்களின் வாழ்வாதாரங்களை சின்னாபின்னமாக்கிய கொரோனா உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது உயிரைப் பணயம் வைத்து சேவை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் இப்பொதுக்குழு தனது உளமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் சமர்ப்பிக்கிறது.

தீர்மானம் 3: 2021 சட்டப்பேரவைத் தேர்தல்

2021ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாட்டின் அமைதிக்கும், சமூக ஒற்றுமைக்கும், ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் முதன்மை எதிரியான பாசிச பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழக மக்களின் உரிமைகளைப் பறிகொடுத்து வரும் அதிமுகவையும், அதன் கூட்டணியில் சேர்ந்துள்ள சந்தர்ப்பவாத கட்சிகளையும் படுதோல்வி அடையச் செய்யவும், மமக இடம்பெற்றுள்ள திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமைத்திடவும் மாநிலம் முழுவதும் முழுவீச்சில் பணியாற்றிட தொண்டர்கள் களமிறங்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 4: குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏஏ கைவிடப்பட வேண்டும்

மத்திய பாஜக அரசு மதவாதக் காழ்ப்புணர்வோடு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம்(சி.ஏ.ஏ),தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.),தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவை இந்நாடு முழுவதுமுள்ள குடிமக்களைக் கொந்தளிக்கச் செய்தன. இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு நாடு தழுவிய மாபெரும் போராட்டங்கள் இச்சட்டங்களுக்கு எதிராகவே நடந்துள்ளன. ஆயினும், மக்களின் உணர்வைக் கடுகளவும் மதிக்காத மத்திய பாஜக அரசு சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகிய கொடுமைகளை இன்னும் கைவிடவில்லை. மக்களின் உணர்வை மதித்து இவற்றை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5: சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உறுதி செய்க

நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் சிறுபான்மையினருக்கு சமூகநீதி அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6: எரிபொருள் விலை ஏற்றம்

மத்திய அரசின் தாராளமயக் கொள்கை எனும் அரக்கணின் பிடியில் சிக்கிய "எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம்" என்ற கொள்கையால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை வரலாறு காணாத வகையிலும், உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவிலும் இந்தியாவில் உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் முதல் வாகனங்கள் வாடகை வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் வரிகளும் இந்த விலையேற்றத்திற்கு முக்கியக் காரணியாக உள்ளதால் மத்திய, மாநில அரசுகள், பெட்ரோலியப் பொருட்கள் மீதான அனைத்து வரிகளையும் பெரும் அளவில் குறைத்து, சீரான விலைகளில் பெட்ரோலியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள விலை நிர்ணயிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7: புதுவை: பாஜகவிற்கு கண்டனம்

ஜனநாயக நடைமுறைகளை காலால் மிதித்து, கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைப்பதை கொள்கையாகக் கொண்டு செயல்படும் பாஜக, கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் குதிரை பேர அரசியல் நடத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, ஆட்சியைப் பறித்து தனதாக்கிக் கொண்டது போன்று புதுச்சேரியிலும் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றத் துடித்து காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியையும் கவிழ்க்கும் நடவடிக்கையில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 8: சிதைக்கப்படும் கருத்துச் சுதந்திரத்திற்குக் கண்டனம்

இந்திய வரலாறு காணாத வகையில் டெல்லியில், பாஜகவினரின் கொடுங்கோண்மைக்கு எதிராகப் போராடிவரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டக் களத்தினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் பகிர்ந்தமைக்காகவும், பெங்களூருவைச் சேர்ந்த மாணவியும் சமூக செயற்பாட்டாளருமான திஷா ரவியை பாசிச பாஜக அரசு கைது செய்ததை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசின் மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்தும் கருத்தாளர்கள் மீது தேசத்துரோக முத்திரைக் குத்தும் ஈனத்தனத்தை பாஜகவின் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும், சிஏஏ மற்றும் வேளாண் சட்டங்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளையும் நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9: சிறைவாசிகள் விடுதலை

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக் கொட்டடிகளில் சிக்கித் தவிக்கும் 36 முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களையும், வீரப்பன் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை பெற்றவர்களையும் பொது மன்னிப்பு வழங்கி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 10: கல்விக் கடன், இலவசக் கல்வி

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இதில் சிக்கி கோடிக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் தங்களது எதிர்கால கனவுகளை இழந்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் தேசிய வங்கிகளில் வாங்கியுள்ள கல்விக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்துவதுடன், வரும்காலங்களில் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை திருத்த வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 11: அந்நிய ஆதிக்கம் ஆபத்து

உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்டவைகளின் "உலகமயம், தாராளமயம், தனியார்மயம்" எனும் நம் நாட்டிற்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் கொள்கைகளை மத்திய அரசு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதால், இந்தியாவின் பணக்கார தனியார் நிறுவனங்கள், கொழுத்து வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு தொழில்கள், குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நசுக்கப்பட்டு அழித்தொழிக்கப்படும் ஆபத்து உள்ளது.
இதனால் லட்சக்கணக்கான இந்திய சிறு, குறு தொழிலதிபர்கள், வியாபாரிகளின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விடும் என்பதால், நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர வர்த்தகம் மற்றும் தொழில்துறையினரின் தொழில் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும் வகையில், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 12: வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறவேண்டும்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், கோடிக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் உட்பட ஒட்டுமொத்த விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் உள்ளது. உணவு பாதுகாப்பு என்ற அரணை உடைத்து, பொது வினியோக முறையைக் குழிதோண்டி புதைத்து, ஒவ்வொரு இந்திய ஏழை, நடுத்த குடிமகனும் உணவுக்கான தனியார் கார்பரேட் நிறுவனங்களிடம் கையேந்தும் நிலைக்கு இச்சட்டம் கொண்டு செல்லும் ஆபத்து உள்ளதால், இச்சட்டங்களை இனியும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு திரும்பப் பெற்று, டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோருகிறது.

தீர்மானம் 13: காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் கைவிடப்பட வேண்டும்

பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருக்கும் அதானி குழுமத்திடம் காட்டுப்பள்ளி துறைமுகம் ஒப்படைக்கும் நாசகர திட்டத்தினால் சுமார் ஒரு இலட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாழும் சுமார் 35 லட்சம் தமிழக மக்கள் வெள்ள அச்சுறுத்தலில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் இயற்கை வளமும் பெரிதும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீன்வளம் பெருமளவில் பாதிக்கப்பட்டு  தமிழகம் மற்றும் ஆந்திரவில் உள்ள 82 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால் துறைமுகத்துக்கும் பழவேற்காட்டுக்கும் இடையே வெறும் 8 கிலோமீட்டர் தூரமே எஞ்சி கடற்கரை அரிக்கப்பட்டு கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் நேரிடும். எனவே காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டுமென இப்பொதுக் குழு கோருகின்றது.

தீர்மானம் 14: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

சிறுபான்மை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அளிக்கப்பட்டுள்ள உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி, சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிராக சில கல்வி நிறுவனங்கள் செயல்படுவதும், பணி நியமனத்திலும், மாணவர் சேர்க்கையிலும் லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறுபான்மைச் சமுதாயத்தைப் புறக்கணிப்பதும் கவனத்திற்கு வந்துள்ளன. இத்தகைய நிறுவனங்கள் உடனடியாகத் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது. ஊழலில் ஊறித் திளைத்து சிறுபான்மை மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் சிறுபான்மை மக்கள் நிறுவனங்களே செயல்பட்டால் மக்கள் போராட்டமும், சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இப்பொதுக்குழு அறிவிக்கிறது.

தீர்மானம் 15: மீனவர்களின் வாழ்வுரிமை

தொடர்கதையாக தொடரும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக மீனவர்கள் உயிர் பயமின்றி மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும் உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 16: பயிர்க்கடன் ரத்தை பரவலாக்குக

சென்ற வாரம் தமிழக முதல்வர் அறிவித்த ரூ.12,110 கோடி விவசாயக் கடன் ரத்து என்ற அறிவிப்பில் உள்ள பல்வேறு குளறுபடிகளை நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு ஆராய்ந்து, 2016ஆம் ஆண்டில் விவசாயிகள் பெற்ற கடன்களையும் இந்த ரத்து அறிவிப்பின் வரம்பிற்குள் கொண்டு வந்து அனைத்து விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.






தகவல்: மமக தலைமையகம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments