புதுக்கோட்டையில் பயங்கரம்: காதலியை பார்க்க சென்ற வாலிபரை அடித்துக்கொலை செய்த காதலியின் அண்ணன்..புதுக்கோட்டையில் காதலியை பார்க்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காதலியின் அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை பாலன் நகரை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் நல்லையா (வயது 23). இவர் கூலி வேைல செய்து வந்தார். இந்த நிலையில் நல்லையா அப்பகுதியில் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். இதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் அண்ணன் பிரபு (30) கண்டித்துள்ளார்.

ஆனாலும், அதனை கண்டுகொள்ளாமல் இருவரும் காதலித்து வந்தனர். பிரபு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். 

இந்த நிலையில் நேற்று அதிகாலை காதலியை பார்க்க அவரது வீட்டிற்கு நல்லையா சென்றார். அங்கு மாடியில் இருவரும் பேசி கொண்டிருந்ததை கண்ட இளம்பெண்ணின் அண்ணன் பிரபு ஆத்திரமடைந்தார். இதனால் அவர் அங்கு கிடந்த கட்டையால் நல்லையாவை பலமாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதுகுறித்து நல்லையாவின் குடும்பத்தினருக்கு பிரபு போன் செய்து தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். அப்போது, நல்லையாவின் தலையில் இருந்து அதிக அளவில் ரத்தம் வந்து கொண்டிருந்ததால், மஞ்சள்பொடி வைத்து நிறுத்த முயன்றனர்.
ஆனாலும் ரத்தம் வெளியேறியது. 

இதனையடுத்து நல்லையாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி அழைத்து செல்ல முயன்றனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்ற போது, நல்லையா இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுதொடர்பாக கொலை வழக்கு பதிந்து பிரபுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை பார்க்க சென்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments