பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: சைக்கிளில் பேரவைக்கு வந்த எம்எல்ஏ



தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, மஜக தலைவர் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் பிப்.27 வரை இந்தக் கூட்டத் தொடர் நடக்கிறது. கூட்டத்தில் துணை முதல்வர், நிதி அமைச்சர் ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஓபிஎஸ் இடைக்கால பட்ஜெட்டை காலை 11 மணிக்குத் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் நடந்தது. சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்கள் பலரும் காரில் வந்து இறங்கினர். அப்போது அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி சைக்கிளில் சட்டப்பேரவைக்கு வந்தார்.

எண்ணெய் நிறுவனங்கள் கையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் பொறுப்பை அளித்ததால் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என மத்திய அரசு பாராமுகமாகவே உள்ளது. இதைக் கண்டிக்கும் வகையிலும், தமிழக அரசு தனது வரியைக் குறைத்து, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி தமிமுன் அன்சாரி சைக்கிளில் வந்தார்.

அவரது சைக்கிளின் முகப்பில் மத்திய அரசைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை அட்டையைக் கட்டியிருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments