அதிகாரிகளின் அலட்சியம்!: உலகிலேயே இல்லாத ஒரு தேதியை (பிப். 30) குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ் அளித்த வட்டாட்சியர் அலுவலகம்..!!




உலகிலேயே இல்லாத ஒரு தேதியை குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம் வழங்கியுள்ள வாரிசு சான்றிதழில் கூலி தொழிலாளி ஒருவர் பிப்ரவரி 30ம் தேதி இறந்துபோனதாக சான்றழிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேயம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி அழகர்சாமி 2000ம் ஆண்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அப்போது இறப்பு சான்றிதழ் வாங்காத நிலையில் 2017ம் ஆண்டு அவரது பிள்ளைகளுக்கு வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டுள்ளது.

இதற்காக அழகர்சாமியின் மகன் குமாரசாமி, கீழராஜகுலராமன் சார்பதிவாளர் அலுவலகத்தை நாடியுள்ளார். அதற்கு மேலராஜகுலராமன் ஊராட்சி அலுவலக பதிவேட்டில் இருந்து எடுத்ததாக கூறி இறப்பு சான்றிதழ் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. அழகர்சாமியின் மற்றொரு மகன் உதயகுமார், வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்து வாரிசு சான்றிதலும் கொடுத்துள்ளார். அப்போது உலகிலேயே இல்லாத தேதியில் அதாவது பிப்ரவரி 30ம் தேதியில் அழகர்சாமி இறந்து போனதாக குறிப்பிடப்பட்டதை கண்ட அதிகாரிகள் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர். வங்கி கடனும் நிராகரிக்கப்பட்டது.

வாரிசு சான்றிதழ் மட்டுமல்ல, அழகர்சாமியின் இறப்பு சான்றிதழிலும் அவர் இறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக உதயகுமார் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த குழப்பம் குறித்து வட்டாட்சியர் ஸ்ரீதரிடம் கேட்டபோது, உரிய விசாரணை நடத்தி சான்றிதழில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஊராட்சி, சார் பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்களின் அலட்சியத்தால் இது போன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments