விசைப்படகு மீனவர்கள் சட்ட விரோதமாக மீன் பிடிப்பதை தடுக்க வேண்டி மாவட்ட கலெக்டரிடம் மனு.!



விசைப்படகு மீனவர்கள் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். அப்போது புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இப்பகுதியில் விசைப்படகு மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருவதால் எங்களது மீன் பிடி தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. கடல் வளம் படிப்படியாக அழிந்து வருகிறது. இதுபோன்ற விசைப்படகு மீனர்வகளின் செயலை கண்டித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அடுத்த இரு வாரங்களில் 5 மாவட்ட மீனவர் சங்கங்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒருக்கிணைத்து கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தார். 

இந்த உத்தரவாதம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும். கடல் மீன் பிடி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments