அறந்தாங்கி அருகே யோகம்பாள்புரத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்.!



அறந்தாங்கி அருகே கோங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட யோகாம்பாள்புரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் பொது வினியோக அங்காடியை திறக்க வேண்டும் என்று கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக சாலை மறியலில் பதாகையுடன் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி அருகே கோங்குடி ஊராட்சியில் உள்ள யோகம்பாள்புரம், அத்தாணி, ஆவாகுளம் மணவயல், அல்லம்பட்டி, தாளிசேரி உள்ளிட்ட கிராம பொதுமக்களுக்கு அங்காடி பொருட்கள் வழங்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் யோகம்பாள்புரத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பூட்டியே கிடக்கிறது. 

இதை உடனே திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் வரும் தேர்தலை அப்பகுதி பொதுமக்கள் புறக்கணித்து விடுவோம் என கூறி நேற்று அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங், தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்) கருப்பையா, வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது தற்போது மாதத்தில் 2 நாட்கள் பொது இடத்தில் வைத்து பொருட்கள் வழங்கப்படும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொண்டதும், கட்டிடம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

சாலை மறியலால் அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments