அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 343 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு.! தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி கந்தர்வகோட்டையில் (தனி) 1 லட்சத்து 810 ஆண்களும், 1 லட்சத்து 241 பெண்களும், மூன்றாம் பாலித்தனர் 20 பேரும் என மொத்தம் 2 லட்சத்து ஆயிரத்து 71 வாக்காளர்கள் உள்ளனர். 

விராலிமலையில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 810 ஆண்களும், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 723 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 550 வாக்காளர்களும், 

புதுக்கோட்டை தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 944 ஆண்களும், 1 லட்சத்து 24 ஆயிரத்து 263 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 22 பேரும் என மொத்தம் 2 லட்சத்து43 ஆயிரத்து 229 வாக்காளர்களும் உள்ளனர்.

இதேபோல திருமயம் தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 974 ஆண்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 167 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 144 வாக்காளர்களும், 

ஆலங்குடியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 955 ஆண்களும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 971 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 16 ஆயிரத்து 930 வாக்காளர்களும்,

அறந்தாங்கியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 883 ஆண்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 151 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்ள் 6 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து40 வாக்காளர்கள் உள்ளனர். 

மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்ளக் 6 லட்சத்து 65 ஆயிரத்து376 பேரும், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 83 ஆயிரத்து 516 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 72 பேரும் என மொத்தம் 13 லட்சத்து 48 ஆயிரத்து 964 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலில் வாக்குப்பதிவுக்காக தொகுதி வாரியாக வாக்குச்சாவடி மையங்கள் கந்தர்வகோட்டையில் 273-ம், விராலிமலையில் 310-ம், புதுக்கோட்டையில் 346-ம், திருமயத்தில் 319-ம், ஆலங்குடியில் 311-ம், அறந்தாங்கியில் 343 என மொத்தம் ஆயிரத்து 902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய்வுத்தளம் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் கோடைகாலம் என்பதால் வாக்குச்சவாடி மையங்கள் முன்பு சாமியானா பந்தல் போட உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கவும், விதிகளை மீறுவதை தடுக்கவும் தொகுதி வாரியாக பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் தொடர்பான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது தொடர்பாக தலைமை தேர்தல் அலுவலர் சத்தியபிரதா சாகு, சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

இதில் புதுக்கோட்டையில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் உமாமகேஸ்வரி பங்கேற்றார். இதில் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவருக்கும் தவறாமல் கோவிட் தடுப்பூசி போடவும், இப்பணிகளை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 

மேலும் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு முககவசம், சானிடைசர், கையுறைகள் போன்றவை வழங்கவும், வாக்காளர்களுக்கு கிருமி நாசினி, முககவசம் வழங்கவும், வெப்பமானி கருவியின் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல்வெப்பநிலையில் மாற்றம் இருப்பவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் வாக்களிக்கச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். 

கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments