புதுக்கோட்டை மாவட்டத்தில் இளம் வாக்காளர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வினியோகம்! வாக்குச்சாவடி மையங்களில் இன்றும் சிறப்பு முகாம்!!



இளம் வாக்காளர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வினியோகம் தொடங்கியது. வாக்குச்சாவடி மையங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணிகளில் புதிதாக சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை இணையதளம் மூலம் வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி செல்போனில் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். NVSP என்ற இணையதளத்தில் உள் நுழைந்து வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது படிவ எண்ணை உள்ளிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ரகசிய குறியீடு எண் (ஓ.டி.பி.) சரிபார்த்து உள்ளிட வேண்டும். மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பதிவிறக்கம் என்பதை தேர்வு செய்து மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். 

இந்தநிலையில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொடுக்கும் சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இளம் வாக்காளர்கள் சிலர் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து பெற்றுச்சென்றனர்.

புதுக்கோட்டை பிரகதாம்பாள் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமினை கலெக்டர் உமாமகேஸ்வரி பார்வையிட்டார். இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். தொழில்நுட்ப இயக்குனர்கள் கணினியில் www.nvsp.in அல்லது https://nvsp.in என்ற இணையதளத்தில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து வினியோகிக்கின்றனர்.

மாவட்டத்தில் இளம்வாக்காளர்கள் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியில் 2,826 பேரும், விராலிமலையில் 409 பேரும், புதுக்கோட்டையில் 5,295 பேரும், திருமயத்தில் 5,286 பேரும் உள்ளனர். மேலும் ஆலங்குடியில் 2,893 பேரும், அறந்தாங்கியில் 4,570 பேரும் என மொத்தம் 21 ஆயிரத்து 279 இளம் வாக்காளர்கள் உள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments