அறந்தாங்கி நகரில் காட்சிப்பொருளான போக்குவரத்து சிக்னல்கள்



அறந்தாங்கி நகரில் அமைக்கப்பட்ட நாளில் இருந்து இயங்காமல் பயனற்று கிடக்கும் போக்குவரத்து சிக்னல்களை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராக அறந்தாங்கி விளங்குகிறது. சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சை, திருச்செந்தூர், நாகர்கோவில், மதுரை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் சென்று வருகின்றன. 

அதேபோல திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல கனரக வாகனங்கள் அறந்தாங்கி வழியாக சென்று வருகின்றன. மேலும் அறந்தாங்கி முக்கிய மணல் வர்த்தக நகராக விளங்கி வருகிறது.

அறந்தாங்கி பகுதியில் ஓடும் வெள்ளாற்றில் இருந்து பல்வேறு பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் வினியோகம் அவ்வப்போது நடந்து வருகிறது. குவாரி இயங்கும் காலங்களில் இந்த குவாரிகளில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு தினசரி ஏராளமான லாரிகளில் மணல் ஏற்றி செல்லப்படும். இதேபோல் அறந்தாங்கி நகருக்குள் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் அறந்தாங்கி நகரம் எப்போது போக்குவரத்து நெரிசல்மிக்க நகராகவே இருந்து வருகிறது.

அறந்தாங்கி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 4 ஆண்டுகளுக்கு முன் அண்ணா சிலை, கட்டுமாவடி முக்கம், பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன. சிக்னல் அமைக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் சிக்னல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்த சிக்னல்கள் இன்று வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பல லட்ச ரூபாய் வீணாகி வருகிறது. சிக்னல்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண்பதோடு நகரில் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கலாம்.

எனவே மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் உடனடியாக அறந்தாங்கி நகரில் அமைக்கப்பட்டு பயன்பாடு இல்லாமல் உள்ள போக்குவரத்து சிக்னல்களை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களின் கோரிக்கையாகும். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அறந்தாங்கி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், கடற்கரை பகுதிகளில் இருந்து சமூக விரோத கும்பல்கள் அறந்தாங்கி நகருக்குள் வந்தால் பிடிக்கும் வகையிலும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன.

பல ஆண்டுகளுக்கு முன் அறந்தாங்கியில் இருந்த சிக்னல்களில் பல குற்றவாளிகள் சிக்கிய நிலையில் அறந்தாங்கி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் இயக்கினால் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களின் லாரிகள் நகரை கடந்து செல்ல முடியாது என்பதற்காக காவல்துறையில் பணியாற்றிய சில அதிகாரிகளால் சிக்னல்களை இயக்க முட்டுக்கட்டை போடப்பட்டது. அந்த அதிகாரிகளுக்கு பிறகு வேறு அதிகாரிகள் பணிக்கு வந்தபோதிலும் அவர்களும் நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சிக்னல் கருவிகள் வீணாகி வருகின்றன என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments