மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா நோயாளிகள் தபால் வாக்கு அளிப்பது எப்படி? - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 2021 பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் கரோனோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய்த் தொற்று இருக்கலாம் என யூகத்திற்கு உரிய வாக்காளர்கள் ஆகியோருக்கு விருப்பத்தின் பேரில் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதியை அளித்துள்ளது.தேர்தல் நடத்தும் அலுவலரால் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தபால் ஓட்டுப் பெறத் தகுதியான மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய்த் தொற்று இருக்கலாம் என யூகத்திற்கு உரிய வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்களை (விண்ணப்பப் படிவம் 12-டி) மேற்படி வாக்காளர்களிடம் அளிப்பார்கள்.

தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட 5 நாட்களுக்குள் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஒப்புதல் பெறுவதுடன் விண்ணப்பப் படிவம் 12-யை பூர்த்தி செய்து பெற்றுக் கொள்வார்கள். மேலே குறிப்பிட்ட 3 வகையான வாக்காளர்கள் தபால் வாக்களிக்க விருப்பம் கோர முடியும். விண்ணப்பப் படிவம் 12 டி-யுடன் தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான சான்று ஆவணங்கள் மற்றும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சான்று ஆவணங்கள் முறையே சம்பந்தப்பட்ட வாக்காளர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் மற்றும் உரிய முறையில் பெறப்பட்ட தபால் வாக்கிற்கான விண்ணப்பங்கள் முறையாக இருந்தால் அவ்விண்ணப்பங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலிக்கப்படும்.

தேர்தல் நடத்தும் அலுவலரால், வாக்காளர்கள் தந்த விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் ஒப்பீடு செய்தும், முறையான அலுவலரால் சான்று ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தும், அவை சரியாக இருந்தால் அந்த வாக்காளர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்படும். தபால் வாக்குகளைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் 12டி-யில் அளித்துள்ள முகவரிக்கு வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் குழு செல்லும். மேற்கண்ட வாக்காளர்களின் வசிப்பிடத்திற்கு செல்லும் முன்பு, செல்லவிருக்கும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் தெரிவிப்பார்கள். அவ்வாறு தபால் ஓட்டு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, மேற்படி வாக்களிப்பதைப் பார்வையிட தகுதியான ஒருவரை வாக்காளர்களே தேர்வு செய்து பார்வையிட செல்லலாம்.

தபால் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு, வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு செய்யும் வழிமுறைகளை தெளிவுபடுத்துவார்கள். வாக்காளர்களால் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டு, கையொப்பமிட்டு, வாக்குப்பதிவு அதிகாரியால் சான்று அளிக்கப்பட்ட உறுதியளிக்கும் படிவமான 13ஏ படிவத்துடன், ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டை கடித உறையில் (படிவம் 13பி) வைத்து ஒட்டி, அதனை பெரிய கடித உறையில் (படிவம் 13சி) வைத்து ஒட்டி அக்குழுவிடம் வாக்காளர்கள் ஒப்படைக்க வேண்டும். வாக்காளர்கள் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் சுயமாக அவர்களது தேர்வுக்குரிய வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை தபால் வாக்குப்பதிவு அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு செல்லும்போது போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும். வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் கொண்ட குழுவோடு ஒரு நுண் பார்வையாளரும் செல்வார். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும் காணொளியாக பதிவு செய்யப்பட வேண்டு்ம். அவ்வாறு காணொளி பதிவு செய்யும்போது ரகசிய வாக்குமுறை கடைபிடிப்பதை மீறாமல் பதிவு செய்ய வேண்டும். வாக்குப்பதிவு செய்ய வரும் குழுவின் வருகையின்போது வாக்காளர் வீட்டில் இல்லாவிட்டால், முன்கூட்டியே தகவல் அளித்து 2-வது முறையும் வருகை தருவார்கள். அதிகாரிகளின் 2-வது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லாவிட்டால் மீண்டும் வரமாட்டார்கள். தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட வர்கள் வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments