அதிமுக- காங்கிரஸ் மோதும் அறந்தாங்கி தொகுதி கண்ணோட்டம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக நகராட்சி பகுதியாக உள்ளது அறந்தாங்கி. இத்தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஆத்ம நாத சுவாமிகோவில் உள்ளது. அதேபோல் தமிழகத்தில் சிறந்த தர்ஹாக்களில் ஒன்றாக கோட்டைப்பட்டினத்தில் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்ஹாவும் உள்ளது.

அறந்தாங்கி தொகுதி
 
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் விசைப்படகுகள் மூலமும் கட்டுமாவடி, புதுக்குடி, ஆர். புதுப்பட்டினம், கோடியக்கரை, முத்துக்குடா உள்ளிட்ட 32 கிராமங்களில் நாட்டுபடகுகள் மூலம் மீனவர்கள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீன் ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவனி கிடைத்து வருகிறது.


சுமார் 20,000 ஏக்கரில் காவிரி நீர் மூலம் பாசனம் செய்யப்படுகிறது. இதுதவிர, மழை நீரை கண்மாய்களில் தேக்கி சுமார் 1 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.










இத்தொகுதியில் முக்குலத்தோர், ஆதிதிராவிடர், முத்தரையர், உடையார், நாடார், யாதவர், வெள்ளாளர், நகரத்தார் போன்ற சமூகத்தினர் வசிக்கின்றனர். இஸ்லாமியர், மீனவர் சமூகத்தினமும் உள்ளனர்.

அறந்தாங்கி தொகுதியில் இதுவரை நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் 12 முறை முக்குலத்தோரும், ஒருமுறை இஸ்லாமியரும், ஒரு முறை உடையார் சமுதாயத்தினரும், ஒருமுறை முத்தரையர் சமுதாயத்தினரும் வெற்றி பெற்றுள்ளனர். திருநாவுக்கரசர் 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அறந்தாங்கி தொகுதியில் அறந்தாங்கி நகராட்சியின் 27 வார்டுகளும், ஆவுடையார் கோவில், மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சிகள் உள்ளன. மேலும், அறந்தாங்கி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும், அரிமளம் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகளும் உள்ளன.

அதில் மணமேல்குடி வட்டம், ஆவுடையார் கோவில் வட்டம், அறந்தாங்கி வட்டம், ஆளப்பிறந்தான், மூக்குடி, ரெத்தினக்கோட்டை, மேமங்களம், கோவில்வயல், மேலப்பட்டு, பள்ளத்திவயல், ஊர்வணி, ஆலங்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன் வயல், கம்மங்காடு, உலகளந்தான் வயல், வீரமங்கலம் அடங்கும்.

அறந்தாங்கி நகரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அறந்தாங்கியில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் அங்கமான சத்திரம் நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்கள் உள்ளன. இவற்றை அறந்தாங்கி நகராட்சியோடு சேர்க்கப்படாததால் அறந்தாங்கி நகரை விரிவாக்கம் செய்வதில் சிக்கலாக உள்ளது. பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படாததால் மக்கள் தினமும் அல்லப்படுகின்றனர்.

பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம், அரசு நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும். இத்தொகுதி முழுமைக்கும் காவிரி நீர் கிடைக்கச் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்காக பல கட்டங்களாக விவசாயிகள் போராடியும் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடலோரப் பகுதிகளில் மீன் கழிவுகளை தீவனமாக்குதல், மீன்பதனக்கிடங்கு அமைக்க வேண்டுமென்பது மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

அதேபோல், நாட்டுப்படகு மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கும் கடலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டு வரும் மோதல்களை அரசு தீர்க்க வேண்டுமெனவும் போராடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இலங்கை கடற்படையால் ஏற்படும் இன்னல்களில் இருந்தும் காப்பாற்ற இப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

அதிமுக சார்பில் 2011-ல் வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏ எம்.ராஜநாயகம் களம் இறக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் எஸ்.டி.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

1951- முகமது சாலிகு (காங்கிரஸ்)
1957- ராமசாமி தேவர் (சுயேட்சை)
1962- துரையரசன் (தி.மு.க.)
1967- துரையரசன் (தி.மு.க.)
1971- ராமநாதன் (தி.மு.க.) 
1977- திருநாவுக்கரசர் (அ.தி.மு.க.)
1980- திருநாவுக்கரசர் (அ.தி.மு.க.)
1984- திருநாவுக்கரசர் (அ.தி.மு.க.)
1989- திருநாவுக்கரசர் (அ.தி.மு.க.)
1991- திருநாவுக்கரசர் (தாயக ம.க.)
1996- திருநாவுக்கரசர் (அ.தி.மு.க.)
2001- அரசன் (எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.)
2006- உதயன் சண்முகம் (தி.மு.க.)
2011- ராஜநாயகம் (அ.தி.மு.க.)
2016- ரத்தினசபாபதி (அ.தி.மு.க.)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments