கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்!



கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் ஊராட்சியில் வாழக்குட்டையான் தோப்பு கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை. மேலும் அந்த கிராமத்தில் உள்ள சிலரது வீடுகளுக்கு குடிநீர் செல்வது நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சிலருக்கு வேலை அட்டையும் வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து நேற்று அம்பு கோவிலில் வீரமாகாளியம்மன் கோவில் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில விவசாயிகள் சங்க செயலாளர் துரைமாணிக்கம், மாவட்ட செயலாளர் மாதவன், ஒன்றிய செயலாளர் ஜேசுராஜ் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், அமிர்தவல்லி, கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் அங்கு சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில், காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments