அமமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது எஸ்டிபிஐ






வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி கமலின் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், எஸ்டிபிஐ கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல் பரவியது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இன்று அமமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு போட்டியிடும் தொகுதிகளும் உறுதியானது. 






தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது.

ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது.

அதேபோன்று, அமமுக கூட்டணியில், கோகுல மக்கள் கட்சிக்கும், மருது சேனை சங்கத்துக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியல் இன்று (மார்ச் 11) வெளியானது. இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இருவரும் கையெழுத்திட்டனர்.

அந்த ஒப்பந்தத்தில், "06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு(SDPI) கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு (SDPI) கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு(SDPI) கட்சிக்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் ஆறு (6) சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

1. ஆலந்தூர்(28)

2. ஆம்பூர்(48)

3. திருச்சி மேற்கு(140)

4. திருவாரூர்(168)

5. மதுரை மத்தியம்(193)

6. பாளையங்கோட்டை(226)" என தெரிவிக்கப்பட்டுள்ளது.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments