“புர்கா” மத பயங்கரவாதத்தின் அடையாளம் – இலங்கை அமைச்சர் சரத் வீரசேகராஇலங்கையில், “புர்கா” அணிய தடை விதிக்கப்படவுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் இந்த தகவலைதெரிவித்துள்ள அமைச்சர் வீரசேகரா, இலங்கை முழுவதும் செயல்படும் சுமார் ஆயிரம் மதரசாக்கள் (இஸ்லாமிய பள்ளிகள்) மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கையில், இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்ததில்லை என்று கூறியுள்ள வீரசேகரா, ‘புர்கா’ என்பது சமீபத்தில் வந்துள்ள, மத பயங்கரவாதத்தின் அடையாளம் என்று கூறியுள்ளார்.

அமைச்சகத்தின் சார்பாக இதுகுறித்த உத்தரவு, அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மதரசாக்கள் இலங்கையின் கல்விக்கொள்கைக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, இஸ்லாமியர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, கொரோனாவால் உயிரிழந்தவர்களை எரியூட்டுவதற்கு இலங்கை அரசு உத்தரவிட்டது. அமெரிக்கா மற்றும் சர்வதே மனித உரிமை அமைப்புகளின் விமர்சனத்திற்குப் பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

2019ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த சமயம், ‘புர்கா’ அணிவதற்கு இடைக்காலமாக இலங்கை அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில், பொது இடங்களில் ‘புர்கா’ அணிவதற்கு தடை விதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து, பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், தடை விதிப்பதற்கு ஆதரவாக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments