புதுக்கோட்டை அருகே லெக்கணாப்பட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு





புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே லெக்கணாப்படி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவு.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

தேர்தல் தேதி அறிவித்த உடனேயே ஒட்டுமொத்த நிர்வாகமும் தேர்தல் ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது. மேலும், தேர்தல் முடியும் வரை சிறப்பு அலுவலர்களைக் கொண்டு சோதனை செய்வது, துணை ராணுவங்களைக் குவிப்பது, வாக்குப்பதிவு செய்யும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு, வாக்காளர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்வது எனத் தேர்தல் முடியும் வரை ஒருவித மாறுபட்ட சூழ்நிலையே காணப்படுகிறது.

இதனால் பள்ளி மாணவர்களுக்கு வாக்குப்பதிவு குறித்த கேள்விகளும், ஏக்கமும் இருந்து வருகிறது. இதைப்போக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அண்மையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதுகுறித்துப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.ஆண்டனி கூறும்போது, ''வாக்குப்பதிவு மையத்தில் எவ்வாறு வாக்குப் பதிவு செய்யப்படுகிறது என்பது உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக பள்ளியில் ஒருநாள் மாதிரி வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன்பாக வாக்குப்பதிவு மையத்தில் உள்ள ஒவ்வொரு அலுவலரின் பணி என்ன, முகவர்களின் பணி, வாக்காளரின் பணி குறித்து முன்கூட்டியே அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் வாக்காளர் பட்டியல், வாக்குச் சீட்டு, விரலில் மை வைத்தல் போன்ற பணிகளை எல்லாம் செய்து மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இவ்வாறு மாணவர்களுக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தியதன் மூலம் வாக்குப்பதிவு குறித்த குழப்பம் நீங்கியது.

மாதிரி வாக்குப்பதிவின்போது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த உடன் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பகிர்ந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது'' என்று தலைமை ஆசிரியர் எஸ்.ஆண்டனி தெரிவித்தார்.

ஏற்கெனவே லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரயில் பயணம் குறித்து மாணவர்களின் ஏக்கத்தைப் போக்கவும், அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் ரயில்போல் வர்ணம் தீட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments