சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு: பெட்ரோல், டீசல் விலையும் குறைய வாய்ப்பு




வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையை 10 ரூபாய் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்.

இதன்படி டெல்லியில் ரூ.819க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை இனி ரூ.809க்கு விற்பனையாகும். சென்னையில் ரூ.835க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை ரூ.825க்கு விற்பனையாகும்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி மற்றும் 15-ம்தேதி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்தது. இதனால் சிலிண்டர் விலை கடந்த இரு மாதங்களில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.125 அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகச் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வந்தது. இதன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையும் கடந்த சில நாட்களில் லிட்டருக்கு 61 பைசா வரை குறைக்கப்பட்டது. இதனால் கேஸ் சிலிண்டர் விலையிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன்படி சமையல் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன.

இதற்கிடையே பெயர் வெளியிட விரும்பாத எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இதன் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும். ஏற்கெனவே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 61 பைசா வரை குறைக்கப்பட்டுள்ளது. இது வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. சமையல் கேஸ் விலையும் குறையும்.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஒப்பிட்டால் சிலிண்டர் விலை குறைவுதான். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.858 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.819 ஆகத்தான் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

தற்போது டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90.56 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.87 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments