ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் செய்ய பயணிகளுக்கு அனுமதியில்லை: ரயில்வே முடிவு






ரயில்களில் பயணிப்போர் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை செல்போன்களை சார்ஜ் செய்ய அனுமதியில்லை. தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மேற்கு ரயில்வே கடந்த 16-ம் தேதி முதல் ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் அனைத்து விதமான பிளக் பாயிண்ட்களிலும் மின் இணைப்பை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில், "ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி தீ விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளில் செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்ட்களுக்கு மின் இணைப்பை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. இதைக் கடந்த 16-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி பி.கணேசன் கூறுகையில், "இந்த உத்தரவுகள் புதிதானவை அல்ல. ஆனாலும், தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

2014-ம் ஆண்டு ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்ட உத்தரவின்படி, ரயில் பெட்டிகளில் சார்ஜிங் பாயிண்ட்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நிறுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. பெங்களூர-ஹசூர் சாஹிப் நான்தெத் எக்ஸ்பிரஸில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சமீபத்தில் ஏற்பட்ட ரயில் தீ விபத்தையடுத்து, இந்த உத்தரவைச் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். ஆதலால், இரவு நேரத்தில் ரயில் பெட்டிகளில் சார்ஜிங் பாயிண்ட்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

டேராடூன்- சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 13-ம் தேதி திடீரென மின்கசிவு ஏற்பட்டு ராஞ்சி ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், ரயில் இன்ஜின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால், நல்வாய்ப்பாக எந்தப் பயணியும் உயிரிழக்கவில்லை. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்களில் இரவு நேரங்களில் சார்ஜிங் பாயிண்ட்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments