புதுக்கோட்டை மாவட்டத்தில் சுட்டெரித்த கோடை வெயில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவலாக மழைபெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களுக்கு ஓரளவு தண்ணீர் வந்தது. ஆனால் சில இடங்களில் ஆக்கிரமிப்பின்காரணமாக தண்ணீர் வரத்தே இல்லாமல் இருந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நிரம்பிய கண்மாய்களில் தண்ணீர் மளமளவென்று குறைந்து வருகிறது.

நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயிலின் உக்கிரம் அனலாக கொதித்தது. இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களின் முகத்தில் அனல் காற்று வீசியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சிலர் குடையை பிடித்தப்படியும், பெண்கள் தங்களது சேலையாலும், இளம்பெண்கள் சுடிதாரின் துப்பட்டாவாலும் தலையை மூடியபடியும் சென்றதை காணமுடிந்தது. வெயிலால் உடல் சருமம் பாதிக்காமல் இருக்க இரு சக்கர வாகனங்களில் சென்ற இளம்பெண்கள் சிலர் தலை மற்றும் கைகளை துணியால் மூடிய படி சென்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் இப்படி அதிகமாக இருப்பதை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மே மாதத்தில் வெயில் எப்படி சுட்டெரிக்குமோ? என்று கவலை அடைந்துள்ளனர்.

வெயிலின் உக்கிரத்தில் தப்பிக்க, தங்களை பாதுகாத்து கொள்ள குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை பொதுமக்கள் சாப்பிட தொடங்கி உள்ளனர். சாலையோரங்களில் இளநீர், நுங்கு, தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

இதேபோல வெள்ளரி பிஞ்சுகள், பழ வகைகளையும் வாங்கி சாப்பிடுகின்றனர். பழ ஜூஸ்களையும், குளிர்பானங்களையும் வாங்கி அருந்துகின்றனர்.

இதற்கிடையில் மோரை பானையில் சுமந்து சென்று சிலர் விற்று வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments