ஏப்ரல் மாதத்தில் அனைத்து நாட்களிலும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்: மத்திய அரசு அறிவிப்பு




நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மையங்கள் ஏப்ரல் மாதத்தில் விடுமுறை தினம் உட்பட அனைத்து நாட்களும் செயல்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழகம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில் கோவிட் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.



கடந்த 24 மணி நேரத்தில், 72,330 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.61 சதவீதம் பேர் மேற்கண்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக, தினசரி கோவிட் பாதிப்பு 39,544ஆக உள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,84,055 ஆக உள்ளது.

மொத்த கோவிட் பரிசோதனையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை 70 சதவீதத்துக்கும் அதிகமாக மேற்கொள்ளும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடுவது இன்று முதல் தொடங்கியது.

நாட்டில் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6.5 கோடியைக் கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6,51,17,896 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 75வது நாளான நேற்று, மொத்தம் 20,63,543 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,14,74,683 -ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 40,382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 459 பேர், கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று (ஏப்ரல் 1ம் தேதி) முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (இணைநோய் இல்லாதோருக்கும்) தடுப்பூசி வழங்கப்படுகிறது. நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் காத்திருந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

இந்தநிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாடுமுழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கூடுதல் எண்ணிக்கையில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வாய்ப்பு இருப்பதால் மாநில அரசுகள் அதற்கு ஏற்றவகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கரோனா தடுப்பூசி மையங்கள் ஏப்ரல் மாதத்தில் விடுமுறை தினம் உட்பட அனைத்து நாட்களும் செயல்பட வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கரோனா தடுப்பூசி மையங்கள் அனைத்து நாட்களும் செயல்படுவதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இன்று முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி போடப்படுவதை மாநில அரசுகள் வேகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments