ஊரடங்கு இல்லாத நிலையில் கரோனா தொற்றைத் தடுப்பது சவாலானது; கடந்த ஆண்டை விட அதிகம்: மத்திய அமைச்சரவைச் செயலாளர் எச்சரிக்கை




ஊரடங்கு இல்லாத நிலையில் கரோனா தொற்றைத் தடுப்பது சவாலானது. தொற்று அதிகரிக்கும் விகிதம் கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கிறது என, மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப்.03) வெளியிட்ட செய்திக்குறிப்பு:



"இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தத் தொற்று அதிவேகமாகவும், பன்மடங்கும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும், அதேவேளையில், பஞ்சாப், கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், அசாம், டெல்லி மற்றும் தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டும் 02.04.2021 அன்று மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையில் மாநிலங்களில் கரோனா நோய்த் தொற்று தொடர்பான விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா பேசுகையில், "மீண்டும் அதிகரிக்கும் கரோனா நோய்த் தொற்று நம் நாட்டின் முக்கியப் பிரச்சினை. சிறிய நகரம் மற்றும் கிராமங்களில் இத்தொற்று உறுதியாவது கவலையளிக்கிறது. கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் நம் அனைவருக்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது நன்றாகத் தெரியும். தடுப்பூசி கிடைக்கப் பெறுவது ஒரு சாதகமான சூழல் என்றாலும், நிலையான வழிகாட்டு முறைகளைக் கடைப்பிடிக்காமல் மெத்தனப் போக்கு கொண்டிருப்பது தொற்று அதிகரிக்க வழிவகை செய்யும். ஊரடங்கு இல்லாத நிலையில் இத்தொற்றைத் தடுப்பது சவாலானது. தொற்று அதிகரிக்கும் விகிதம் கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கிறது.

இச்சூழலில் இத்தொற்றினைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்துச் செயல்படுத்த அறிவுரை வழங்கினார்.

1. பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு தொற்றின் நேர்மறை விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழ் கொண்டுவர அறிவுறுத்தினார். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை தொற்றின் நேர்மறை விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழாகவே உள்ளது என்ற போதிலும் ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைகளை அதிகப்படுத்த ஆணையிட்டதன் விளைவாக நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற அளவிலிருந்து தற்பொழுது நாளொன்றுக்கு 85,000 ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்தப்படுகிறது.

2. கோவிட் பரிசோதனை முறைகளில் குறைந்தபட்சம் 70 சதவீதம் ஆர்.டி-பி.சி.ஆர் முறையில் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். தமிழ்நாட்டினை பொறுத்தவரை 100 சதவீதமும் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.

3. நோய்த்தொற்று ஏற்பட்டவரின் உடன் இருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தபட்சமாக 25 முதல் 30 நபர்களை விரைவாக கண்டறிந்து ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை நோய்த்தொற்று ஏற்பட்டவரின் உடனிருப்பவர்கள் மற்றும் தொடர்பில் உள்ளவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய்த் தொற்று இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

4. மேலும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு, மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் அந்தப் பகுதி நோய்கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 02.04.2021 அன்று 846 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு கோவிட் கவனிப்பு மையம் அல்லது பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தேவைக்கு அதிகமாகவே படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள், பாதுகாப்புக் கவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக 108 அவசர கால ஊர்தி செயல்பாட்டில் உள்ளது.

6. கோவிட் தொற்றினைத் தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு மீண்டும் வலியுறுத்த வேண்டும். இதை சட்டப்படி கண்காணித்து செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஊடகங்கள், துண்டுப் பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வலியுறுத்தப்படுகிறது. மேலும், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன்படி இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதார, உள்ளாட்சி, காவல், வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்படுகிறது. 16.03.2021-லிருந்து 02.04.2021 வரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.2 கோடியே 58 லட்சத்து 98 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் கூடும் இடங்களாகிய சந்தை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த திருவிழாக்களில் கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

7. கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மக்களிடையே, இத்தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி 02.04.2021 அன்று வரை சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் என 31 லட்சத்து 75 ஆயிரத்து 349 பயனாளிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. மேலும் 03.04.2021 அன்று வரை 54 லட்சத்து 78 ஆயிரத்து 720 தடுப்பூசி டோஸ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

8. கோவிட் தொற்றினால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க அரசு வெளியிட்டுள்ள நிலையான சிகிச்சை நெறிமுறைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப் பெற்று மத்திய அரசின் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் உள்ள வல்லுநர்களின் ஆலோசனைக்கு ஏற்ப நிலையான சிகிச்சை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்றப்படுகிறது.

9. மேலும், பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்குகிறது. பொதுமக்கள் மேற்கொண்டு தகவல்களைப் பெறவோ தங்கள் குறைகளைத் தெரிவிக்கவோ 24 மணி நேரமும் இயங்கும் 104 தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

10. மேலும், நோய்த்தொற்று குறித்து தினசரி தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கோவிட் பெருந்தொற்றினைப் பரவாமல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும், முறையாகக் கைகளைக் கழுவியும் மற்றும் அரசின் இன்ன பிற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்தும் கரோனா பெரும்தொற்றினைத் தடுத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments