மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை: புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை!



புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாவர்களின் வீடுகளில் குழாய் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கு 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. நகராட்சி நிர்வாகம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் காவிரி நீர் குழாய் மூலம் வீடுகளுக்கு நேரடியாகவும், தெருக்களில் குடிநீர் தொட்டி பைப் மற்றும் அடிபம்பு மூலமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக நகராட்சி பகுதியில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சாலை மறியலும் நடைபெற்றது.

இதற்கிடையில் வீடுகளில் பலர் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி பயன்படுத்துவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சும் நபர்கள் மீது நகராட்சி நிர்வாகத்தினர் கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அந்த மின்மோட்டார்களை பறிமுதல் செய்வதோடு, ரூ.8 ஆயிரம் வரை அபராதம் விதித்து குடிநீர் இணைப்பை துண்டிக்க முடிவு செய்துள்ளனர்.

இதேபோல நகராட்சி நிர்வாகத்தினரிடம் குடிநீர் இணைப்பு பெற்றவர்களில் 44 சதவீதம் பேர் வரை குடிநீர் கட்டணம் செலுத்தி உள்ளனர். மீதமுள்ள 56 சதவீதம் பேர் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குடிநீர் தேவைப்படும் பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் லாரியில் வினியோகிக்கப்படும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் 04322-222253, கட்டணமில்லா தொலைபேசி எண் 18004251529 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு குடிநீர் வசதி கேட்டால் லாரி மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேற்கண்ட தகவலையும் நகராட்சி நிர்வாகம் தரப்பில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments