ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தவர்களிடம் ரூ.300 கோடி அபராதம் வசூலித்த SBI - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
ஜீரோ பேலன்ஸ் அல்லது அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு (BSBDA) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து இந்த அபராதத் தொகையை வசூலித்திருக்கிறது.
மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் 300 கோடி ரூபாயை எஸ்.பி.ஐ வங்கி அபராதமாக வசூலித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ உள்ளது. அரசுத் துறை வங்கி என்பதால், சேமிப்பு உள்ளிட்ட வங்கி கணக்குகளுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை மக்களும் தேர்தெடுக்கின்றன. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள எஸ்.பி.ஐ, 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த வங்கி, வாடிக்கையாளர்களிடம் இருந்து சத்தமில்லாமல் 300 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது.


ஒரே நாளில் இந்த தொகையை வசூலித்துவிடவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக அபராத வசூலில் எஸ்.பி.ஐ ஈடுபட்டுள்ளது. மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்திருக்கிறது.

ஜீரோ பேலன்ஸ் அல்லது அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு (BSBDA) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து இந்த அபராதத் தொகையை வசூலித்திருக்கிறது. பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்காக அறிவிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் எஸ்.பி.ஐ வசூலித்துள்ள அபாராத தொகை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு குறைந்தபட்ச வசதிகள் மட்டுமே அளிக்கப்படுவதுடன், மினிமம் பேலன்ஸ் இல்லையென்றாலும் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், கணக்கை தொடங்க பணம் ஏதும் செலுத்த தேவையில்லை. அத்துடன் கணக்கில் பணம் இல்லாமல் போனாலும் அபராதம் கிடையாது. ஆர்.பி.ஐ விதிப்படி, இரு வருடங்களுக்கு முன் இந்தக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், அபராதம் விதிக்கப்படாது என்று 2013ஆம் ஆண்டின் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் கூறுகிறது. ஆர்.பி.ஐ-ன் இந்த வழிகாட்டுதலை மீறியுள்ள எஸ்.பி.ஐ வங்கி, இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களிடம் 2015ஆம் ஆண்டிலிருந்து மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் 17.70 ரூபாய் என்ற வீதம் அபராத வசூலிப்பில் ஈடுபட்டுள்ளது. 2015ம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை எஸ்பிஐ வங்கி, சுமார் 12 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து 300 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.

2018-19ஆம் ஆண்டில் 72 கோடி ரூபாயும், 2019-20ஆம் ஆண்டில் 158 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறது. அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி 3.9 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து 9.9 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இவ்வாறு வசூலித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது அறமற்ற செயல் என ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல ரிசர்வ் வங்கியின் விதிகளை வெளிப்படையாகவே மீறியிருப்பதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மும்பை ஐஐடி வலியுறுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments